போர்க்காலப் படைப் பிரிவில் தேசியச் சேவையாளராக இருந்த ஆடவர், திங்கட்கிழமை (ஜூன் 30) மாலை மாஜு முகாமுக்கு வெளியே மயங்கி விழுந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த 30 வயது ஆடவர் மாண்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
தற்காப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கையில் இதை வெளியிட்டது.
மாண்ட ஆடவர் திங்கட்கிழமை மாலை 6.50 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் மாஜூ முகாமில் தேசியச் சேவை உடலுறுதி மேம்பாட்டுப் பயிற்சியில் (NS FIT) ஈடுபட்டார்.
பயிற்சி முடிந்தபிறகு அந்த ஆடவர் தாம் நன்றாக உணர்வதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் பயிற்சி நிலையத்தைவிட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இரவு 8.11 மணிக்கு மாஜூ முகாமிலிருந்து ஆடவர் வெளியேறினார். ஆனால் முகாமிற்கு வெளியே சென்ற சில நிமிடங்களில் அவர் மயங்கிக் கீழே விழுந்தார்.
ஆடவர் கீழே விழுந்ததைக் கண்ட வழிப்போக்கர் உடனடியாக அவசர உதவி வாகனத்தை அழைத்தார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு 8.16 மணிக்குத் தகவல் கொடுத்ததாகவும் 8.25 மணிக்கு அவசர உதவி வாகனம் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் தற்காப்பு அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆடவர் மயங்கி விழுந்தவுடன் அவருக்கு முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டன. அவர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்படும் வரை தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல்வேறு அவசர உதவி நடவடிக்கைகளுக்குப் பிறகு 9.54 மணிக்கு அந்தச் சேதிய சேவையாளர் மாண்டுவிட்டதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது.
இச்சம்பவத்தை அடுத்து சிங்கப்பூர் ஆயுதப் படை, தேசியச் சேவை உடலுறுதி மேம்பாட்டுப் பயிற்சியை ஜூலை 4 வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இடைப்பட்ட நாள்களில் பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக உள்ளதா என்பது குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று ஆயுதப் படை தெரிவித்தது.
ஆடவர் மரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.

