நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) புதிய இளநிலைக் கல்லூரியில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொகுதியாக 500 மாணவர்கள் சேரவிருக்கின்றனர்.
‘சிஎன் யாங்’ (CN Yang) கல்விமான் திட்டம், ரெனெய்சன்ஸ் (Renaissance) பொறியியல் திட்டம், பல்கலைக்கழகக் கல்விமான்கள் திட்டம் ஆகிய பல்கலைக்கழகத்தின் முக்கிய பிரிவுகளின் மாணவர்களும் முதல் தொகுதி மாணவர்களில் இருப்பர்.
முதல் ஆண்டு முடிவில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் இதர பிரிவுகளின் மாணவர்கள், ஹானர்ஸ் கல்லூரியில் இணைவதற்கான வாய்ப்பைப் பெறுவர்.
என்டியு ஹானர்ஸ் கல்லூரியின் மாணவர்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல் ஆகிய பள்ளிகளிலும் பிரிவுகளிலும் தொடர்ந்து நீடிப்பர். அவர்கள் சொந்த பிரிவுகளின் பாடத்திட்டங்களோடு மற்ற பிரிவுகளைச் சேர்ந்த சிறப்புப் பாடத்திட்டங்களையும் மேற்கொள்வர்.
நன்மைபயக்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, தொழில்முனைப்புத் திறன்கள், தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பது ஆகியவற்றில் புதிய ஹானர்ஸ் கல்லூரி கவனம் செலுத்தும்.
சமூகத் தேவைகளைப் பூர்த்திசெய்ய தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்குவதிலும் மாணவர்கள் பயிற்சி பெறுவர்.
யோசனைகளை வர்த்தக வாய்ப்புகளாக மாற்றுவதற்கான $100,000 நிதி வழங்கப்பட்ட திட்டமும் புதிய கல்லூரியில் உண்டு.
கல்வி முடித்த மாணவர்கள் இளநிலைச் சான்றிதழுடன் என்டியு ஹானர்ஸ் கல்லூரி சான்றிதழையும் பெறுவர்.
தொடர்புடைய செய்திகள்
“உலகத்தை இன்னும் சிறப்பானதாக்குவதற்கு முனைப்புடன் உள்ளோரை உருவாக்குவது கல்லூரியின் இலக்கு,” என்றார் என்டியு தலைவர் ஹோ டெக் ஹுவா.
இதற்குமுன் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) யேல் - என்யுஎஸ் கல்லூரியையும் பல்கலைக்கழக கல்விமான் திட்டத்தையும் இணைத்ததன் விளைவாக என்யுஎஸ் கல்லூரியை (என்யுஎஸ்சி) உருவாக்கியது.
ஆகஸ்ட் 2022ல் ஹானர்ஸ் கல்லூரியாகக் கருதப்படும் என்யுஎஸ்சி முதல் தொகுதியாக 400 மாணவர்களைச் சேர்த்துக்கொண்டது.