தகாத செயல்களில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆய்வாளருக்குச் சிறை

1 mins read
45c83afc-ce52-4a0c-8f96-4d2ff13e4288
லின் ஜுன்குவான் 2021 மார்ச் மாதத்தில் குட்டைப் பாவாடை அணிந்திருந்த பெண் ஒருவரைப் படம்பிடித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (என்டியு) முன்னாள் ஆய்வாளர் லின் ஜுன்குவான், 33, (படம்) பொது இடங்களிலும் பள்ளியிலும் குட்டைப் பாவாடை அணிந்த பெண்களைப் பலமுறை ஆபாசமாகப் படம்பிடித்தார்.

இறுதியில் அவர் பைனியர் ரயில் நிலையத்தில் வழிப்போக்கர் ஒருவரிடம் பிடிபட்டார்.

திங்கட்கிழமையன்று சிங்கப்பூரரான அவருக்கு எட்டு மாதச் சிறைத்தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

குற்றம் நடந்த வேளைகளில், லின் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்ததாக அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் கூறினார்.

விசாரணையின்போது லின் தமது குற்றங்களை ஒப்புக்கொண்டார். 2018ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே அத்தகைய காணொளிகளை எடுத்துவந்ததாக அவர் கூறினார்.

வழக்கமாக ஓராண்டுக்கு ஆறு காணொளிகளை மட்டும் எடுத்ததாகக் கூறிய அவர், 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவரிடமும் தாம் மன்னிப்பு கேட்பதாக நீதிமன்றத்தில் லின் கூறினார். இனி இத்தகைய குற்றத்தைச் செய்யமாட்டேன் என்றும் அவர் உறுதிகூறினார்.

விசாரணை முடியும்வரை தாம் மீண்டும் குற்றம் புரியவில்லை என லின் கூறினார்.

முதல்முறையாக குற்றம் புரிந்த லின், காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்கியதை தாம் கருத்தில்கொண்டதாக நீதிபதி வோங் கூறினார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த என்டியு பேச்சாளர் ஒருவர், லின் 2021ல் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

பாலியல் தொந்தரவைப் பல்கலைக்கழகம் அறவே பொறுத்துக்கொள்ளாது என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்