சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனமான இன்கம் - ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ் ஒப்பந்தத்தின் கீழ், பங்குதாரர்களுக்கு $1.85 பில்லியனைத் திருப்பித் தரும் திட்டம் குறித்து தொழிலாளர் இயக்கத்தின் மத்திய குழுவிற்கு அக்டோபர் 14 அன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிடப்படுவதற்கு முன்பு தெரியாது என்று தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் துணைப் பொதுச் செயலாளர் டெஸ்மண்ட் டான் கூறினார்.
மத்திய குழுவிற்கு இன்கம் காப்புறுதி, அதன் தாய் நிறுவனமான தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்டர்பிரைஸ் ஆகியவை ஒப்பந்தத்தின் உத்திபூர்வ நிபந்தனைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளன. ஆனால், மூலதன குறைப்புத் திட்டம் அதற்கு தெரிவிக்கப்படவில்லை என்று புதன்கிழமை (அக்டோபர் 16) அன்று நாடாளுமன்றத்தில் திரு டான் கூறினார்.
இன்கம் பங்குச்சந்தையில் இடம்பெறாத பொது நிறுவனம் என்பதால், அலியான்சின் கையகப்படுத்தும் திட்டங்கள் குறித்து வணிக ரீதியாக முக்கியத் தகவல்களை வெளியிடாமல் இருக்கும் சட்டபூர்வ பொறுப்புக்கு அது இணங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
காப்புறுதி (திருத்த) மசோதா மீதான விவாதத்தின்போது தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் முன் வாய், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் ஜோஷுவா தாமஸ் ஆகியோரின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது திரு டான் இதனைத் தெரிவித்தார். கையகப்படுத்துதல், இணைத்தல் ஆகிய சிங்கப்பூர் விதிகளுக்கு உட்பட்டது இன்கம் என்றும் அவர் கூறினார்.
மூலதனக் குறைப்புத் திட்டம், சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனமான இன்கம் - ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்சுக்கும் இடையிலான $2.2 பில்லியன் உத்தேச ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதற்கான ஒரு முக்கியக் காரணியாகும். இது குறித்து ஜூலை மாதம் முதன்முதலில் வெளியிடப்பட்டது. அலியான்ஸ் நிறுவனம் குறைந்தது 51% இன்கம்மின் பங்குகளை வாங்க முன்வந்தது.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் அமைச்சர்நிலை அறிக்கை மூலம், அந்த ஒப்பந்தம் தற்போதைய வடிவத்தில் தொடர்வது பொது நலனுக்கு உகந்தது அல்ல என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அக்டோபர் 14 அன்று, நாடாளுமன்றத்தில் கூறினார்.