எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தாக்கம் வேலையிடத்தில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதனால் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) இளையர்கள்மீது அதிகக் கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைவர் இங் சீ மெங் ‘சிஎன்ஏ’வுக்கு திங்கட்கிழமை (பிப்ரவரி 23) நேர்காணல் கொடுத்திருந்தபோது இக்கருத்தைக் குறிப்பிட்டார்.
நேர்காணலில் சிங்கப்பூரின் வேலைச் சந்தை, ‘ஏஐ’யால் ஏற்படும் தாக்கம், வேலையிடங்களில் இளையர்களுக்கான ஆதரவு ஆகியவை குறித்துத் திரு இங் சீ மெங் பேசினார்.
“தற்போது படிப்பை முடித்துப் பட்டம் பெறும் இளையர்கள் இடையே கவலை உள்ளது. ‘ஏஐ’யால் தொடக்கநிலை வேலைகள் பாதிப்படையலாம், அந்தக் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தொழிற்சங்க காங்கிரசின் பங்கு வலுவாக இல்லை” என்றார் அவர்.
“சிங்கப்பூரின் கல்வித் தரம் உலக அளவில் சிறப்பாக உள்ளது. தற்போது தொழில்நுட்பம் வேலை இடங்களை மாற்றி அமைக்கிறது. அதனால் கல்வி நிலையங்களிலிருந்து வேலையிடத்திற்குச் செல்லும் பாதையை மாற்றியமைப்பது குறித்து யோசிக்க வேண்டும்,” என்றார் திரு இங் சீ மெங்.
இம்மாதத் தொடக்கத்தில் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் ஏஐ-ரெடி எஸ்ஜி (AI-Ready SG) என்னும் திட்டத்தை உருவாக்கியது.
சிங்கப்பூரர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுக்கான பயிற்சிப் பாதைகளை வகுப்பது, செயற்கை நுண்ணறிவுக் கருவிகளின் கட்டணங்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்றவை புதிய முயற்சிகளில் உள்ளடங்கும்.
இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் இளையர்களுக்கு என்டியுசி தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று இங் சீ மெங் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது என்டியுசி, இளையர்களுக்கு மேலும் உதவும் விதமாக வழிகாட்டித் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அது ‘என்டியுசி லேர்னிங்ஹப்பின்’கீழ் செயல்படுத்தப்படும்.
இளையர்களுக்காகவும், அண்மையில் பட்டப்படிப்பை முடித்து வேலைக்குச் செல்வோருக்காக அறிமுகப்படுத்தப்படும் என்டியுசி திட்டங்கள் குறித்த மேல்விவரங்கள் இவ்வாண்டு நடுப்பகுதியில் வெளியிடப்படும் என்றும் திரு இங் சீ மெங் நேர்காணலின் போது தெரிவித்தார்.

