என்டியுசி ஃபுட்ஃபேர் கூட்டுறவு அமைப்பு மீது உணவுப் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
அந்த நிறுவனம் சீருடைக் குழுக்கள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் உணவுக் கடைகளுக்கு உணவைத் தயாரித்து அளிக்கிறது.
சில்லறை விற்பனை அல்லாத உணவு வர்த்தகங்களில் உணவு விற்பனை தொடர்பான விதிமுறைகளை மீறிய மூன்று குற்றச்சாட்டுகளை அது எதிர்நோக்குகிறது.
10 செனோக்கோ வே என்னும் முகவரியில் உள்ள அதன் வளாகத்தில் 2023 ஜூலை 25ஆம் தேதி சேமித்து வைக்கப்பட்ட உணவு கெட்டுப்போகாமல் இருப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்ய நிறுவனம் தவறியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பச்சையாக ஊறவைக்கப்பட்ட கோழியை முறைப்படி மூடி வைக்கவில்லை என்றும் அதனை, இறைச்சி உறைய வைக்கும் அறையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிக்குக் கீழ் வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே நாளில் பாதுகாப்பற்ற மீன் உணவு அந்த வளாகத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. உணவு நச்சையும் வயிற்றுப் போக்கையும் ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரி அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற உணவு நிலையங்களை சரிவரப் பராமரிக்கவும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் என்டியுசி ஃபுட்ஃபேர் தவறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
திருத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுத்தரப்புக்குப் போதுமான விவரங்களைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று என்டியுசி ஃபுட்ஃபேர் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த நிறுவனத்துக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றம் தொடர்ந்தால், அது சரிசெய்யப்படும் வரை நாள் ஒன்றுக்கு $100 வரை கூடுதல் அபராதம் விதிக்கப்படலாம்.


