அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், தொழிலாளர் இயக்கத்திற்கும் ஊழியரணி வளர்ச்சிக்கும் கடந்த 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து அளித்து வரும் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் அவருக்கு இவ்வாண்டின் தொழிற்சங்க கௌரவப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
முக்கியத் தொழில்துறை மாற்றங்களின்போது சிங்கப்பூர் ஊழியர்களுக்கு வழிகாட்டியதற்காகவும் உலக மேடையில் சிங்கப்பூரின் நிலையை முன்னிறுத்தியற்காகவும் அவர் இவ்வாண்டின் மே தின விருதளிப்பில் கௌரவிக்கப்பட்டார்.
தொழிலாளர் இயக்கத்துக்கு உயரிய சேவையாற்றியவர்களுக்கு தேசிய தொழிற்சங்க காங்கிரசின் கௌரவப் பதக்கம் வழங்கப்படுகிறது.
“இந்த 20 ஆண்டுகளில் பல்வேறு தலைவர்களைச் சந்திக்க முடிந்ததையும் ஊழியர்களுக்கு உதவ முடிந்ததையும் எண்ணி நெகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.
“சிங்கப்பூரில் நாம் கொண்டிருக்கும் தனித்துவமான முத்தரப்பு உறவுமுறை, நம்பிக்கையையும் விழுமியங்களையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் சிறப்பாக இயங்குகிறது,” என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் விவியன் கொள்கைசார் தலைமைத்துவத்தையும், தொழிலாளர்கள்மீது ஆழ்ந்த பரிவையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் குறிப்பிட்டது.
பொருளியல், தொழில்துறை மாற்றங்கள் நிறைந்த காலங்களில், முத்தரப்பு உணர்வை நிலைநிறுத்துவதில் அவர் உறுதியான அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளார் என்றும் அது தெரிவித்தது.
இந்த வருடாந்தர விருதளிப்பு விழா, தொழிலாளர் இயக்கத்துடன் இணைந்து தொழிலாளர்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள், முத்தரப்புப் பங்காளிகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறு அமைப்புகளையும் தனிநபர்களையும் அங்கீகரிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
ஆர்கிட் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்ற இவ்வாண்டின் விருதளிப்பில் மொத்தம் 188 விருதுகள் வழங்கப்பட்டன.
1963ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த விருதளிப்பு நிகழ்ச்சியில், இவ்வாண்டு ஆக அதிகமானோர் சிறப்பிக்கப்பட்டனர்.
விருது பெற்றவர்களில் ஒருவரான டைகர் ஹாங் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் ரவி சந்திரன், “இந்த அங்கீகாரம் கிடைத்தது மிகுந்த பெருமையளிக்கிறது,” என்று கூறினார்.
இந்த விருது, தொடர்ந்து ஊழியர்களிடையே நல்ல பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கவும், மரியாதைக்குரிய பணியிடத்தை உறுதிசெய்யவும், தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோக்கிப் பயணம் செய்யவும் தம்மைத் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
விருதளிப்பில் உரையாற்றிய தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைவர் கே. தனலட்சுமி, “தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் அதிவேகமாக மேம்பட்டு வந்தாலும், தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்றும் ஊழியர்களுக்குத் துணைநிற்கும்,” என்று உறுதியளித்தார்.


