தேசிய தொழிற்சங்க காங்கிரசில் (என்டியுசி) உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனைக் கடந்துவிட்டதாக அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்து உள்ளார்.
அந்தத் தொழிற்சங்க அமைப்பின் தலைமைப் பதவியை திரு இங் ஏற்கும் முன்னர் அதன் உறுப்பினர் எண்ணிக்கை 900,00ஆக இருந்தது. தற்போது அது 55 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்துள்ளது.
வரம் 2030ஆம் ஆண்டுக்குள் உறுப்பினர் எண்ணிக்கையை 1.5 மில்லியனுக்கு உயர்த்த என்டியுசி இலக்கு நிர்ணயித்து உள்ளது.
திரு இங், 2018 ஏப்ரல் மாதம் என்டியுசியின் துணைத் தலைமைச் செயலாளர் பொறுப்பை ஏற்றார். ஒரு மாதம் கடந்த பின்னர் தலைமைச் செயலாளர் பதவிக்கு அவர் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
என்டியுசி சாதித்தவற்றை விளக்கி அவர் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
“ஊழியர்களின் சம்பளம், நல்வாழ்வு மற்றும் வேலைவாய்ப்புகளில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளோம், இருப்பினும், எங்களது பயணம் இத்துடன் நின்றுவிடாது.
“வர்த்தகப் போரால் உலகின் நிச்சயமற்ற நிலவரம் அதிகரித்து வருவதை அறிவோம்.
“அமெரிக்காவுக்கான சிங்கப்பூரின் ஏற்றுமதிப் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டதால் பாதிப்புக்கு ஆளாகும் வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவ ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய பணிக்குழுவில் என்டியுசியும் இடம்பெற்று உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“நிலவரத்தை அது உற்றுக் கவனித்து வருகிறது. தேவை அதிகரிக்கும் போது உதவிக்கான நடவடிக்கைகளை அதிகரித்து முயற்சிகளை தீவிரப்படுத்த என்டியுசி உறுதிபூண்டு உள்ளது,” என்று திரு இங் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரை உள்ளடக்கிய பிஎம்இ பிரிவினர், இளையர், பராமரிப்பாளர்கள், மூத்தோர், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய இணையத்தள ஊழியர்கள் போன்றோர், குறைந்த வருமானம் ஈட்டுவோர் ஆகியோரின் வாழ்க்கையை முன்னேற்றி என்டியுசி சாதித்த விவரம் அந்த அறிக்கையில் இடம்பெற்று உள்ளது.