தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்டியுசி தேசிய தினக் கொண்டாட்டத்தில் 20,000 பேர் கலந்துகொள்வர் என எதிர்பார்ப்பு

2 mins read
2cbcf5d0-0585-4424-af5c-5b0f551b523f
என்டியுசி இளையர் பிரிவின் நிர்வாகச் செயலாளரும், என்டியுசி தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழு இணைத் தலைவருமான நடாஷா சோய் (நடுவில்) இதர இளைய தொண்டூழியர்களுடன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இளமைத் துள்ளலுடன் மீண்டும் களைகட்டவுள்ளது இந்த ஆண்டின் என்டியுசி தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டம்.

கூடுதலான இளையர்களை ஈடுபடுத்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கொண்டாட்டமானது இளையர்களுக்கு அதிகாரமளிப்பதையும் அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை அளிப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

‘மாஜுலா எஸ்ஜி யூத்’ என்பது இந்த ஆண்டின் என்டியுசி தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாகும்.

சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் இந்த ஆண்டில் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வரும் இளையர்கள் கனவு கண்டு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பங்களிக்க ஊக்குவிக்கிறது இந்தக் கொண்டாட்டம்.

புதன்கிழமை (18 ஜூன்) என்டியுசி நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தக் கொண்டாட்டம் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டன.

சென்ற ஆண்டைவிடப் பெரிதாக இந்தக் கொண்டாட்டம் மரினா பே கடல் முனையில் (The Promontory@Marina Bay) நடைபெறும்.

இம்முறை மூன்று நாள்களில் இரண்டு நாள்கள் முன்னோட்டக் கொண்டாட்டமாகவும் இறுதி நாள் தேசிய தினக் கொண்டாட்டமாகவும் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெறும்.

20,000க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்டியுசி இளையர் பிரிவின் நிர்வாகச் செயலாளரும், என்டியுசி தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழு இணைத் தலைவருமான நடாஷா சோய், எஸ்ஜி 60 கொண்டாட்டம் என்பதால் இம்முறை இளையர்களைக் கவர்ந்திழுக்கும் பல்வேறு நடவடிக்கைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகச் சொன்னார்.

இளையர்களுக்கான நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு உள்ளூர் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. புகழ்பெற்ற உள்ளூர் இசையமைப்பாளர் ஷபீரும் அவர்களில் அடங்குவார்.

இளையர்களை ஈடுபடுத்தும் வகையில் என்டியுசி தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டத்தில் மூன்று முக்கிய காட்சிப் பதாகைகள் காட்சிக்கு வைக்கப்படும்.

‘ட்ரீம் எக்ஸ்சேஞ்ச்’ அம்சத்தில் பங்கேற்பாளர்கள் ஒரு சிங்கப்பூரர் இதர சிங்கப்பூரருக்கு ஊக்கமளிக்கும் வகையில் சொல்லும் செய்தியைத் தொலைபேசியில் கேட்கலாம்.

‘மாஜுலா எஸ்ஜி’ நிறுவலில் இளையர்கள் சிங்கப்பூரை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதை ஒட்டிய கைவண்ணங்களைக் காணலாம்.

‘தி ஃபியூச்சர் வி கிரியேட்’ எனும் அம்சத்தில் சிங்கப்பூரின் எதிர்காலம் மாணவர்களால் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பது குறித்து அவர்கள் எழுதியுள்ள குறிப்புகளைச் செயற்கை நுண்ணறிவு மூலம் அழகாகக் காட்சிப்படுத்தப்படும்.

என்டியுசி அமைக்கும் முகப்பில் 18லிருந்து 25 வயதுக்கும் உட்பட்ட இளையர்கள் பணி சார்ந்த ஆலோசனைப் பெறலாம். அதற்கு அவர்கள் உறுப்பினர் கட்டணமாக ஆண்டுக்கு $36 செலுத்த வேண்டும்.

என்டியுசி தேசிய தின அணிவகுப்புக் கொண்டாட்டத்தைக் காண விரும்புவோர் http://ndpbaycelebrations.ntuc.org.sg/ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்