தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது என்டியுசி

2 mins read
09093584-1b4f-4788-b8ce-049d54483efe
மறுவேலை வாய்ப்புக்குத் தகுதி உடையோருக்கான வயதையும் 69ஆக என்டியுசி உயர்த்தி உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தனது ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 64க்கு அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், மறுவேலை வாய்ப்புக்குத் தகுதி உடையோருக்கான வயதையும் அது 69ஆக உயர்த்தி உள்ளது.

புதிய நடைமுறை 2025 ஜனவரி 1 முதல் நடப்புக்கு வரும் என்று திங்கட்கிழமை (டிசம்பர் 9) வெளியிடப்பட்ட அறிக்கையில் என்டியுசி தெரிவித்து உள்ளது.

சிங்கப்பூரில் எல்லா ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் மறுவேலை வாய்ப்புக்கான வயதையும் அதிகரிக்கும் ஏற்பாடு அடுத்த ஆண்டு நடப்புக்கு வர இருக்கும் நிலையில், என்டியுசி அதனை அடுத்த மாதமே செயல்படுத்த உள்ளது.

வயதை உள்ளடக்கிய தனது வேலைவாய்ப்பு நடைமுறைகளுக்கு இணங்க என்டியுசி இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ஓய்வுபெறும் வயது 63ஆகவும் மறுவேலைக்கான வயது 68ஆகவும் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடப்பில் உள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள், ஓய்வுபெறும் வயதை 65ஆகவும் மறுவேலைக்கான வயதை 70ஆகவும் படிப்படியாக உயர்த்தப்போவதாக அரசாங்கம் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவித்து இருந்தது.

அதற்கு இணங்க, 2025 ஜூலை முதல் ஓய்வுபெறும் வயது 64 ஆகவும் மறுவேலைக்கான வயது 69ஆகவும் உயர்த்தப்படும் என்று பொதுச் சேவைத் துறை கடந்த ஜூலை மாதம் கூறியது.

வயதில் மூத்த ஊழியர்கள் தங்களது ஓய்வு பெறும் வயதையும் மறுவேலைக்கான வயதையும் அடையுமுன்னரே அவர்களை ஆதரிக்க தான் கடப்பாடு கொண்டு உள்ளதாக என்டியுசி தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

என்டியுசி, என்டியுசி கிளப், என்டியுசி என்டர்பிரைஸ் ஆகியவற்றிலும் அவற்றின் வர்த்தகங்களிலும் 63 வயதைக் கடந்த 2,350 ஊழியர்கள் வேலை செய்வதாகவும் அது கூறியுள்ளது.

பொதுவான ஓய்வுபெறும் வயது நடைமுறை நடப்புக்கு வருமுன்னரே தனது ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை என்டியுசி அதிகரிப்பது இது இரண்டாவது முறை.

கடந்த 2021ஆம் ஆண்டு, தனது ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 63ஆகவும் மறுவேலைக்கான வயதை 68ஆகவும் அது உயர்த்தியது.

மூத்த ஊழியர்களுக்கான தனது ஆதரவை என்டியுசி விளக்கியது.

“ஓய்வு வயதை நெருங்கும் ஊழியர்களை முன்கூட்டியே அணுகி, அவர்களின் ஓய்வு மற்றும் மறுவேலைக்கான திட்டங்கள் குறித்து என்டியு கலந்து பேசுகிறது.

“அவர்கள் தொடர்ந்து, வேலைக்குப் பொருத்தமானவர்களாகத் தொடர்வதற்குத் தேவையான பயிற்சி வாய்ப்புகளை அது வழங்குகிறது,” என்று என்டியுசியின் அறிக்கை குறிப்பிடுகிறது.

“ஓய்வு பெற்ற பின்னர் மறுவேலையில் நியமிக்கப்படும்போது அவர்களுக்கான அனுகூலங்களும் சம்பளமும் சீரான முறையில் தொடரும் என்ற உறுதி மூத்த ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

“செய்யும் வேலையிலும் பொறுப்பிலும் மாற்றம் செய்ய இருதரப்பிலும் ஒப்புக்கொண்டு இருந்தால் மட்டும் அந்த ஏற்பாடு வேறுபடும்,” என்று என்டியுசி தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்