தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி), நிறுவனங்கள் வர்த்தக நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கான செலவை ஈடுகட்டும் மானியத் திட்டத்துக்கு அரசாங்கம் கூடுதல் நிதி அளிக்கவேண்டும் என்று கோரியுள்ளது.
கூடுதலான ஊழியர்களை மேம்பட்ட வேலைகளில் பணியமர்த்த அது தேவைப்படுவதாக என்டியுசி கூறியது.
நிறுவனப் பயிற்சிக் குழு (CTC) மானியத்துக்கு வழங்கப்பட்ட $100 மில்லியனில் 85 விழுக்காட்டுக்கும் அதிகமான தொகை, 2022ஆம் ஆண்டு அத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஒப்புதல் பெற்ற திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டிறுதியில், 330க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஏறத்தாழ 480 திட்டங்கள் ஒப்புதல் பெற்றிருந்தன.
என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், ஜனவரி 10ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்புச் சந்தையில் உரையாற்றும்போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
‘சிடிசி’ மானியம் எந்த அளவு பயனளிக்கிறது என்று அரசாங்கம் ஆய்வுசெய்யும் என்று கூறிய அவர், அதன் பிறகு மீண்டும் ஒருமுறை என்டியுசியின் பங்காளித்துவத்தோடு நிறுவனங்களை மேம்படுத்த முயற்சி மேற்கொள்வதோடு ஊழியர் நலனிலும் அக்கறை செலுத்தும் என்றார்.
‘சிடிசி’ மானியத்தின்கீழ் வரும் திட்டங்கள் மூலம் 7,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெறுவர் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு வழக்கமான வருடாந்தர ஊதிய உயர்வுக்குமேல் சராசரியாக ஐந்து விழுக்காட்டு ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். அல்லது பணி முன்னேற்றத்துக்கான தெளிவான பாதைகள் அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மண்டபத்தில் ஜனவரி 10, 11ஆம் தேதிகளில் ஏற்பாடு செய்துள்ள வேலைச் சந்தையில் என்டியுசி முதன்முறையாக முதலாளிகளுக்கும் ஊழியர்களுக்கும் அது வழங்கவிருக்கும் உதவிகள் குறித்த முழுத்தொகுப்பையும் காட்சிப்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு (2024) நவம்பர், டிசம்பர் மாதங்களில் என்டியுசி நடத்திய கருத்தாய்வில் சிங்கப்பூர் ஊழியர்கள், வேலைப் பாதுகாப்பு குறித்துக் கவலை தெரிவித்தது குறித்தும் திரு இங் பேசினார். கருத்தாய்வில் பங்கேற்றவர்களில் 34 விழுக்காட்டினர் அடுத்த மூன்று மாதங்களில் தாங்கள் வேலை இழக்கக்கூடும் என்று கவலை தெரிவித்திருந்தனர்.
பொருளியல் மறுவடிவமைக்கப்படும்போது மாற்றங்கள் நேருவதாகக் கூறிய அவர், சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தால் நிறுவனங்களோடு சேர்ந்து சிங்கப்பூரர்களும் புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற முடியும் என்றார் திரு இங்.
புதிய வழிகாட்டித் கட்டமைப்பு (mentors’ network) தொடங்கப்படுவதாக அவர் தமது உரையில் அறிவித்தார். பணியிடைக்கால ஊழியர்கள், இளம் ஊழியர்கள், பெண்கள் ஆகியோருக்கு ஆலோசனை வழங்க தற்போது நடப்பிலுள்ள மூன்று திட்டங்களின்கீழ் செயல்படும் 1,100 வழிகாட்டிகளை அது ஒருங்கிணைக்கிறது.

