என்டியுசி தலைவர் தனலெட்சுமி: மாறும் திறன் வேலைப் பாதுகாப்பை முழுமைப்படுத்தும்

2 mins read
34bd9b57-e480-4d00-bb3e-715f73def0b2
வளர்ந்துவரும் துறைகளில் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளுக்காக ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் அவசியத்தை என்டியுசி தலைவர் கே. தனலெட்சுமி அனைத்துலக ஊழியரணி மாநாட்டில் தெரிவித்தார். - படம்: அனைத்துலக ஊழியரணி அமைப்பின் காணொளி

உலகப் பொருளியல் நிச்சியமின்மைக்கு இடையிலும் சூழ்நிலைக்குத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் வளர்ச்சி அடைவதற்கும் ஊழியர்களுக்கு உதவ ஊழியரணி இயக்கம், இன்றைய வேலைகளைப் பாதுகாக்க முற்படுவது மட்டுமின்றி வருங்கால வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் அவர்களுக்குக் கைகொடுக்கவேண்டும்.

இதற்காக, தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) தனது திறன் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும். 

இதன்வழியாக வளர்ந்துவரும் துறைகளில் வேலைகளைப் பெறுவதற்கான தங்கள் வாய்ப்புகளை ஊழியர்கள், மேம்படுத்தலாம் என்று என்டியுசியின் தலைவர் கே. தனலெட்சுமி,  சந்திப்பு ஒன்றில் ஆற்றிய உரையின்போது கூறினார்.

சுவிட்சர்லாந்தின் ஜனீவா நகரில் நடைபெற்று வரும் வருடாந்தர அனைத்துலக ஊழியரணி மாநாட்டில் உரையாற்றிய திருவாட்டி தனலெட்சுமி,  நாளைய வேலை மாறும் திறன் இன்றைய வேலைப் பாதுகாப்புடன் சேர்ந்து அதனை முழுமைப்படுத்தவேண்டும் என்று கூறினார்.

ஜூன் 2 முதல் ஜூன் 13 வரை நீடிக்கும் இந்த மாநாட்டில், என்டியுசியுடன் அரசாங்கப் பிரதிநிதிகளும் சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனமும் சிங்கப்பூரின் சார்பாகப் பங்கேற்கின்றனர். இவர்களுடன் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் இடம்பெறுகிறார்.

கடந்த 60 ஆண்டுகளாகச் சுதந்திர சிங்கப்பூர் அடைந்துள்ள நிம்மதிக்கும் முன்னேற்றத்திற்கும் நல்ல வேலைகள், ஊழியரணி உரிமைகள், பொருளியல் வளர்ச்சி ஆகியவை முக்கியமாகத் திகழ்ந்ததாகத் திருவாட்டி தனலெட்சுமி குறிப்பிட்டார். 

மற்ற பல நாடுகளைப் போல சிங்கப்பூரும், உலகப் பொருளியல் உறுதியின்மையால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கிடையே பயணம் செய்து வருகிறது. 

ஏப்ரல் 2ல் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தம் வர்த்தகப் பங்காளிகள் பெரும்பாலானோர் மீது வரிகளை விதித்துள்ளதை அடுத்து இந்த விவகாரம் முன்னிலை பெற்றுவருகிறது. 

இதன் தொடர்பான அபாயங்களை எதிர்கொள்ள அரசாங்கம், முதலாளிகள், ஊழியரணி இயக்கம் ஆகியோர் ஒன்றுசேர்ந்து சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் செயற்குழுவை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

என்டியுசி தன் பங்கிற்கு 3,000 நிறுவனப் பயிற்சி செயற்குழுக்களையும் உருவாக்கியுள்ளதாகத் திருவாட்டி தனலெட்சுமி தெரிவித்தார். இந்தத் திட்டம் இதுவரை 7,400 ஊழியர்களுக்கு நன்மை பயத்துள்ளது.

 ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக ஒப்பந்தங்கள் ஓரிரண்டை அனைத்துலக ஊழியரணி அமைப்பும் அதன் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து உருவாக்கவும் திருவாட்டி தனலெட்சுமி விருப்பம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்