வழிகாட்டுதல் முயற்சியை என்டியுசி அதிகரிக்கும்

2 mins read
செலவு குறித்த ஊழியர்களின் கவலையைத் தணிக்க வரவுசெலவுத் திட்டம் உதவும் என்று நம்பிக்கை
23f8dd7d-0e27-4ce0-adab-03ebf40749f9
தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், நிறுவனப் பயிற்சிக் குழு மானியத்திற்கு அரசாங்கத்தின் புதிய நிதி வழங்கப்படும் என்று தொழிலாளர் இயக்கம் நம்புவதாக மீண்டும் வலியுறுத்தினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தொழிற்சங்கங்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள், திறன்கள், பணியில் வழிகாட்டுதல் போன்றவற்றுக்காக ஊழியர்களை வழிகாட்டிகளுடன் இணைக்க உதவும் முன்னோடித் திட்டத்தை தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தொடங்கவிருக்கிறது.

வழிகாட்டிகள் 1,200 பேரின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை இத்தகைய நிறுவனங்கள் விரைவில் பெறும்.

முதற்கட்டமாக, சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர்கள் சங்கம், எஸ்டி இஞ்சினீயரிங் ஊழியர் சங்கம், மின்னணுவியல், மின்னியல் துறைகள் சார்ந்த ஊழியர்களின் கூட்டுச் சங்கம் ஆகியவற்றின்கீழ் இணைந்துள்ள நிறுவனங்கள் நிறுவன வழிகாட்டுதல் வட்டத்தின் மூலம் பயனடையும்.

முன்னோடித் திட்டம் குறித்த விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

தற்போதைய முயற்சிகளிலிருந்து காங்கிரஸ் கற்றுக்கொண்ட அம்சங்கள் இந்த முன்னோடித் திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர்.

முன்னோடித் திட்டத்தின் முதற்கட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று தொழிற்சங்கங்கள், அவற்றில் இணைந்துள்ள பேரளவிலான ஊழியர்களின் எண்ணிக்கை, பல்வேறு விதமான ஊழியர்களுக்கு அவை சேவை வழங்குவது ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

என்டியுசி தற்போது மூன்று வழிகாட்டுதல் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது. அவற்றில் சேர, தனிநபர்கள் பதிவு செய்துகொள்வது கட்டாயம்.

ஆனால் புதிய முன்னோடித் திட்டத்தில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் வாயிலாகச் சேரலாம்.

வழிகாட்டுதல் நடைமுறையில் நிறுவனங்களையும் இணைப்பதால் மேம்பட்ட ஒருங்கிணைப்பு சாத்தியமாகும் என்றார் திரு இங்.

நிறுவனங்கள் மேம்பட்ட செயல்திறனுடைய ஊழியர்களைப் பெற உதவும் வகையில் வழிகாட்டுதல் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக அவர்களைப் பொருத்தமான வழிகாட்டிகளுடன் இணைக்க முடியும் என்றார் அவர்.

புதிய திட்டத்தில் இணைந்துள்ள வழிகாட்டிகள் 1,200 பேரில் பாதிக்கு மேலானவர்கள் உயரிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் (C-suite) அல்லது இயக்குநர் நிலையில் உள்ளவர்கள் என்று கூறப்பட்டது. மேலும், 80 விழுக்காட்டுக்கு மேற்பட்டோருக்குக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகால அனுபவம் உண்டு என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்