தொழிலாளர் இயக்கம், ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ, இவ்வாண்டு $37 மில்லியன் ஒதுக்கக் கடப்பாடு கொண்டுள்ளதாகத் தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் அறிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (மே 1) நடைபெற்ற மே தினப் பேரணியில் உரையாற்றியபோது, அவர் அதனைத் தெரிவித்தார்.
மூப்படையும் சமுதாயம், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மாற்றங்கள் ஆகிய இரண்டு கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் சிங்கப்பூர் எதிர்கொள்வதாக அவர் கூறினார்.
ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் உதவ, அத்தியாவசியப் பொருள்களின் விலைகளில் $5 மில்லியன் சேமிப்பை என்டியுசியும் ஃபேர்பிரைஸ் குழுமமும் வழங்குகின்றன என்றும் ஃபேர்பிரைஸ் குழுமச் செயலியின் சலுகைகள் மூலம் தொழிற்சங்க உறுப்பினர்கள் அதிகம் சேமிக்கலாம் என்றும் திரு இங் சொன்னார்.
‘மெட்டா’, ‘மைக்ரோசாஃப்ட்’ போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அண்மையில் அறிவித்த உலகளாவிய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்தும் திரு இங் பேசினார்.
அத்தகைய சூழல்களால் ஊழியர்கள் இடையே நிச்சயமின்மை நிலவினாலும், அரசாங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், முதலாளிகள் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்புப் பங்காளித்துவம் சவால்களைச் சமாளிப்பதில் உதவலாம் என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவால், பல்வேறு துறைகளில் உள்ள வேலைகள் மாறக்கூடும் என்று திரு இங் கூறினார். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கணக்காளர்கள் உள்ளிட்டோரின் வேலைகளும் அவற்றில் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்குத் தயார்படுத்த ஊழியர்களுக்கு உதவ, அண்மையில் அமைக்கப்பட்ட வேலைகளுக்கான முத்தரப்பு மன்றம் கைகொடுக்கும் என்று கூறினார் திரு இங்.
தொடர்புடைய செய்திகள்
தொழிற்சங்க உறுப்பினர்கள் தங்கள் பணியில் செயற்கை நுண்ணறிவைச் சோதித்துப்பார்த்து, கற்றுக்கொண்டு, நம்பிக்கையுடன் பயன்படுத்த, செயற்கை நுண்ணறிவுச் சாதனங்களுக்கான சந்தாக்களுக்கு அவர்களுக்கு நிதி ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிபுணத்துவத் தொழிலாளர்கள் உட்பட அதிகமான ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த என்டியுசி அதன் நிறுவனப் பயிற்சிக் குழுக்களை விரிவுபடுத்திவருவதாகவும் தெரிவித்தார் திரு இங்.

