வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் (கொண்டோமினியம்) எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது மாதமாகச் செப்டம்பரிலும் சரிவைச் சந்தித்தன.
ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதத்தில் அது 17.2 விழுக்காடு குறைந்தது.
எஸ்ஆர்எக்ஸ், 99.co ஆகிய சொத்து இணையவாசல்கள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 18) வெளியிட்ட முன்னோட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதத்தின் 7,456 வீடுகளுடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதத்தில் 5,172 வீடுகளே வாடகைக்கு விடப்பட்டன.
வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 7.7 விழுக்காடு கூடியது. ஆனால், அது ஐந்தாண்டு செப்டம்பர் மாத சராசரி அளவைவிட 5 விழுக்காடு குறைவு.
34.5 விழுக்காட்டு வீடுகள் மத்திய வட்டாரத்துக்கு வெளியிலும், 33.4 விழுக்காட்டு வீடுகள் மத்திய வட்டாரத்திலும், 32.1 விழுக்காட்டு வீடுகள் மத்திய வட்டாரத்தின் மையப்பகுதியிலும் வாடகைக்கு விடப்பட்டன.
இதற்கிடையே, வாடகைக்கு விடப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தைவிட செப்டம்பரில் 11.8 விழுக்காடு குறைந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் வாடகைக்கு விடப்பட்ட 2,625 வீவக வீடுகளுடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதத்தில் 2,314 வீடுகளே வாடகைக்கு விடப்பட்டன.
ஆண்டு அடிப்படையில், வாடகை விடப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை 17.3 விழுக்காடு குறைந்தது. செப்டம்பர் மாதத்திற்கான ஐந்தாண்டு சராசரி அளவைவிட அது 11.7 விழுக்காடு குறைந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதே வேளையில், வீவக வீடுகளின் வாடகை 0.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.
“கழக வீடுகள், கூட்டுரிமை வீடுகள் என இரு சந்தைகளிலும் வாடகைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு வீடுகளின் வாடகை நிலைப்படுவதற்காக வாடகைதாரர்கள் தங்கள் முடிவுகளைத் தாமதப்படுத்துவதே முக்கியக் காரணம்,” என்கின்றார் 99.co சொத்து இணையவாசலின் தரவு, பகுப்பாய்வு பிரிவின் தலைமை அதிகாரி லுக்மான் ஹக்கீம்.
மேலும், வாடகைதாரர்கள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கூட்டுரிமை வீடுகளை விரும்புவதால் வாடகைக்கு விடப்படும் வீவக வீடுகளின் வாடகை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார்.
சில வீவக வீட்டு உரிமையாளர்கள் மேம்பட்ட தனியார் வீடுகளுக்கு மாற விரும்புவதால் வாடகைக்கு விடப்படும் வீவக வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றார் அவர்.


