சிங்கப்பூரில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
இவ்வாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் விற்பனைக்குப் பதிவான புதிய கார்களில் 43 விழுக்காடு மின்சார வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு முழுமைக்கும் விற்பனையான புதிய கார்களில் 33.8 விழுக்காடு மின்சார வாகனங்களாக இருந்தன. இது அதற்கு முந்திய 2023ஆம் ஆண்டு 18.2 விழுக்காடாக இருந்தது.
இவை தவிர, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வாகன உரிமைச் சான்றிதழுக்குப் பதிவு செய்யப்பட்ட ‘ஏ’ பிரிவு கார்களில் கிட்டத்தட்ட பாதியளவு, அதாவது 45.6 விழுக்காட்டு வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருந்தன.
இது, 2024ஆம் ஆண்டு 37.3 விழுக்காடாகவும் 2023ஆம் ஆண்டு 15 விழுக்காடாகவும் இருந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல, ‘பி’ பிரிவு கார்களில் 39.8 விழுக்காடு மின்சார கார்களாக உள்ளன.
இந்த விகிதம் கடந்த ஆண்டு 29.7 விழுக்காடாகவும் 2023ஆம் ஆண்டு 21.5 விழுக்காடாகவும் இருந்தது.
செப்டம்பர் இறுதி நிலவரப்படி, சிங்கப்பூரில் 41,732 மின்சார கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இது ஒட்டுமொத்த கார்களின் எண்ணிக்கையில் 6.3 விழுக்காடு என நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டு 4 விழுக்காடு, 2023ஆம் ஆண்டு 1.8 விழுக்காடு என மின்சார கார்களின் விகிதம் இருந்தது. அது படிப்படியாக உயர்ந்து வருகிறது.
பொதுவாக, பி பிரிவு கார்களைக் காட்டிலும் ஏ பிரிவு கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் குறைந்த விலை உள்ளவை. ஆயினும், குறைந்த மின்னாற்றலுடனான மின்சார வாகனங்களின் வரத்து காரணமாக இரு பிரிவுகளுக்குமான கட்டண விகிதம் அருகருகே உள்ளது.
அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆகக் கடைசி ஏலத்தில், ஏ பிரிவு கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் $122,000 ஆகப் பதிவானது. இது, பி பிரிவு கார்களைக் காட்டிலும் $9,889 அல்லது 7.5 விழுக்காடு குறைவு.
2024 அக்டோபரில் அது $10,990 குறைவாக இருந்தது. இது இரு பிரிவுகளுக்கும் இடையிலான கட்டணங்களில் 9.6 விழுக்காடு குறைவு.
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, பிஒய்டி, கியா, டெஸ்லா ஆகியன ஏ பிரிவு வாகன உரிமைச் சான்றிதழ் கட்டண விதிமுறைகளுக்கு இணங்க, சிங்கப்பூருக்கு மட்டும் சில குறிப்பிட்ட வகை கார்களை மின்சார வாகனங்களாக தயாரித்து வழங்கி வருகின்றன.
மின்னூட்ட வசதிகள்
மின்சார வாகனங்களுக்கு மின்னூட்டும் வசதிகளும் சிங்கப்பூரில் அதிகரித்து வருகின்றன.
தீவு முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட மின்சார வாகன மின்னூட்ட முனைகள் உள்ளன.
அவற்றில் கிட்டத்தட்ட பாதியளவு பொதுவான பயன்பாட்டில் உள்ளன. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் மின்னூட்டும் முகப்புகளின் எண்ணிக்கையை 60,000க்கு உயர்த்த சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.

