சம்பளம் வழங்கப்படாத 400 வெளிநாட்டு ஊழியர்களுக்கு 40 நிறுவனங்கள் உதவி

சம்பளம் வழங்கப்படாத 400 வெளிநாட்டு ஊழியர்களுக்கு 40 நிறுவனங்கள் உதவி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Jun 2026 - 9:25 am

2 mins read

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், சம்பள நிலுவைத் தொகை குறித்துத் தெரிவித்த கேபிஏ எஞ்சினியரிங் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வேலை தேடித் தந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 150 காலி வேலையிடங்களைக் கொண்ட 40 நிறுவனங்களில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்.

சம்பள விவகாரத்தால் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குத் தொழிற்சங்கக் காங்கிரசின் வெளிநாட்டு ஊழியர் நிலையமும் உதவிவருகிறது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் உடனடித் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள ஒவ்வொருவருக்கும் $100 ரொக்கமும் $100 மதிப்புள்ள ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டன.

ஊழியர்கள் தங்கியிருந்த துவாஸ் வியூ விடுதிக்கு நேரடியாகச் சென்று அவர்களிடம் பேசினார் மனிதவளத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ். ஊழியர்கள் கூறியது வருத்தமளிப்பதாகச் சொன்ன அவர், சம்பள நிலுவைத் தொகை அவர்களையும் அவர்களின் குடும்பத்தையும் பாதித்திருப்பதாகக் கூறினார்.

துவாஸ் வியூ விடுதியில் தங்கியிருப்பதற்கான காலம் முடிந்த பிறகு செங்காங்கில் உள்ள மனிதவள அமைச்சின் அறிமுக நிலையங்களுக்குப் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் மாற்றப்படுவர் என்று திரு தினே‌ஷ் தெரிவித்தார்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (வலது) மனிதவளத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் பேசினர்.
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (வலது) மனிதவளத் துணையமைச்சர் தினே‌ஷ் வாசு தாஸ் பாதிக்கப்பட்ட ஊழியர்களிடம் பேசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“ஊழியர்கள் சிலரிடம் பணமே இல்லை. எனவே, கைப்பேசியில் பணம் நிரப்பி அன்புக்குரியவர்களுடன் பேசவும் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளவும் அவர்களுக்குக் குறிப்பிட்ட தொகையை வழங்கியிருக்கிறோம்,” என்றார் அவர்.

ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்காமல் இருந்ததாகக் கூறப்படும் முதலாளிகள்மீது மனிதவள அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் திரு தினே‌ஷ் எச்சரித்தார். ஊழியர்களின் சம்பள நிலுவைத் தொகை குறித்து விசாரிப்பதாகவும் ஊழியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர் பேசினார்.

ஊழியர்களைச் சந்திக்கத் திரு தினே‌‌ஷுடன் சென்றிருந்த தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், வெளிநாட்டு ஊழியர்களில் பலருக்கு மலையளவு கடன் இருக்கிறது என்றார்.

ஒருசில ஊழியர்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிவைக்க மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது தெரியவந்ததையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

இம்மாதம் 22ஆம் தேதி, சம்பள நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரக் கோரி 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் திரண்டனர்.

கேஏபி இன்ஜினியரிங், எஸ்கே இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள், குறைந்தது இரண்டு மாதச் சம்பளத்தைத் தங்களுக்குத் தரவில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதுகுறித்து மனிதவள அமைச்சு இரண்டு நிறுவனங்களிடமும் விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்தங்குவிடுதிசம்பளம்நிலுவை