சிங்கப்பூரில் ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தமான குடும்ப அலுவலகங்களின் எண்ணிக்கை 2024ல் தொடர்ந்து அதிகரித்து, ஆண்டிறுதிக்குள் 2,000ஐ தாண்டியதாக நிதி இரண்டாம் அமைச்சரும் சிங்கப்பூர் நாணய ஆணையத் துணைத் தலைவருமான திரு சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
2024 ஆகஸ்ட் இறுதிக்குள் ஏறக்குறைய 1,650 குடும்ப அலுவலகங்களுக்கு ஆணையம் வரிச்சலுகைகளை வழங்கியதாக செப்டம்பரில் அவர் கூறியிருந்தார்.
அதன்படி, 2024ன் கடைசி நான்கு மாதங்களில் அந்த எண்ணிக்கை 21 விழுக்காட்டுக்குமேல் அதிகரித்தது. 2023 இறுதி நிலவரப்படி, 1,400ஆக இருந்த அந்த எண்ணிக்கை, குறைந்தது 42.9 விழுக்காடு உயர்ந்தது. அதுவும், கடந்த ஆண்டின் எண்ணிக்கை அதிகரிப்பு, 2023ல் பதிவாகிய 300ஐ விட இருமடங்காகும்.
தொழிலுக்கும் புத்தாக்கத்துக்கும் உகந்த சிங்கப்பூரின் நிலைப்பாடு, முதலீட்டாளர்களுக்கு நிலையான, ஒழுங்குபடுத்தப்பட்ட சூழலை ஏற்படுத்தித் தந்ததாக போக்குவரத்து அமைச்சருமான திரு சீ செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
நிதிச் சேவைகள், சொத்து நிர்வாகம் இவ்விரண்டும் இவ்வாண்டு சிங்கப்பூருக்கு முக்கிய வளர்ச்சி அம்சமாக இருக்கும் என்று ‘யுபிஎஸ் ஏஷியா வெல்த் ஃபாரம்’ நிகழ்ச்சியில் அவர் சொன்னார்.
குடும்ப அலுவலகங்களுக்கான ஆசியாவின் முதன்மை மையங்களில் ஒன்றாக சிங்கப்பூர் உருவெடுத்து வருகிறது. பெரும் பணக்காரக் குடும்பங்களின் செல்வத்தை நிர்வகிக்கும் தனியார் வசம் உள்ள நிறுவனங்களே குடும்ப அலுவலகங்கள்.
சிங்கப்பூரின் நிலைத்தன்மை ஒருபுறமிருக்க, இங்கு குடும்ப அலுவலகங்கள் அதிகரித்திருப்பதற்கு நிதி மையமாக சிங்கப்பூர் எட்டியுள்ள நிலையும் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.