தவறாக நடத்தப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தற்காலிக பராமரிப்பு வழங்கும் குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2023ஆம் ஆண்டில் 614 வளர்ப்பு குடும்பங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை 2013ல் 243 ஆக இருந்தது.
2013ஆம் ஆண்டில் 309 ஆக இருந்த வளர்ப்புப் பெற்றோரால் பராமரிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 540 ஆக உயர்ந்தது.
இந்தப் புள்ளிவிவரங்கள், செப்டம்பர் 2024ல், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சால் வெளியிடப்பட்ட முதல் வீட்டு வன்முறை போக்குகள் பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்ற தேவையுள்ள குழந்தைகளை அதிகமானோர் வளர்ப்புப் பெற்றோர் பராமரிப்பு மற்றும் உறவினர் பராமரிப்பில் வைக்க அமைச்சு விரும்புகிறது. இரண்டு பராமரிப்பு ஏற்பாடுகளும் கூட்டாக குடும்பம் சார்ந்த பராமரிப்பு என்று அழைக்கப்படுகின்றன.
ஏனெனில், குழந்தைகள் இல்லம் போன்ற குடியிருப்புப் பராமரிப்பில் வைக்கப்பட்ட குழந்தைகளுடன் ஒப்பிடும்போது, குடும்ப அடிப்படையிலான பராமரிப்பில் உள்ள குழந்தைகள் நீண்டகால அடிப்படையில் சிறப்பான முறையில் பயனடைந்தனர்.
2023ஆம் ஆண்டில், சொந்த வீடுகளுக்கு வெளியே பராமரிக்கப்பட வேண்டிய குழந்தைகளில் 66 விழுக்காட்டினர் குடும்ப அடிப்படையிலான பராமரிப்பில் வைக்கப்பட்டனர். இது 2013ல் 41 விழுக்காடாக இருந்தது.
பிப்ரவரி 18ஆம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவது போன்ற, அதிக வளர்ப்புப் பெற்றோரை நியமிக்க தமது அமைச்சு மேற்கொண்ட முயற்சிகளை எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
“பாதுகாப்பான மற்றும் நிலையான வீட்டுச் சூழல் அவர்களின் வளர்ச்சிக்கும் மீள்தன்மைக்கும் முக்கியம் என்பதால், வளர்ப்புப் பெற்றோருடன் அதிக குழந்தைகளை அரசாங்கப் பராமரிப்பில் வைக்க அமைச்சு முயல்கிறது,” என்று திரு மசகோஸ் கூறினார்.
வளர்ப்புப் பெற்றோரை நியமிக்கவும், அவர்களின் வளர்ப்பு குழந்தைகளைப் பராமரிக்க அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பல்வேறு வழிகளில் அவர்களுக்கு ஆதரவளிக்கவும் அமைச்சு ஐந்து வளர்ப்பு நிறுவனங்களை நியமித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஒரு பிள்ளையை வளர்க்கும் வளர்ப்புப் பெற்றோருக்கு மாதத்திற்கு $936லிருந்து $1,100 ஆக உதவித்தொகையை அதிகரித்தது.
வளர்ப்புப் பெற்றோர்கள் தங்கள் பராமரிப்புப் பொறுப்புகளைச் சமநிலைப்படுத்த உதவும் வகையில் குழந்தைப் பராமரிப்பு விடுப்புக்குத் தகுதியுடையவர்கள் என்று திரு மசகோஸ் கூறினார்.
இவை அனைத்தையும் மீறி, அதிகமான வளர்ப்புப் பெற்றோரை நியமிப்பதில் சவால்கள் உள்ளன.
“வளர்ப்பு குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான நேரமும் வளமும் இருப்பது, குடும்ப உறுப்பினர்களுக்கும் வளர்ப்பு குழந்தைகளுக்கும் இடையே ஏற்படக்கூடிய மோதல்கள், குழந்தைகள் தங்கள் பிறந்த குடும்பங்களுக்குத் திரும்பும்போது ஏற்படும் உணர்ச்சி ரீதியான சிரமம் ஆகியவை பொதுவான கவலைகளில் அடங்கும்,” என்று அமைச்சர் கூறினார்.
இந்தக் கவலைகளைத் தீர்க்க, உதாரணமாக, குழந்தை தனது உண்மையான குடும்பத்திற்குத் திரும்புவதற்கான நேரம் நெருங்கி வரும்போது, வளர்ப்புப் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களைத் தயார்படுத்தவும், குழந்தை வெளியேறிய பிறகு அவர்களுக்கு ஆதரவளிக்கவும் வளர்ப்புப் பராமரிப்புப் பணியாளர்கள் உதவுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.