ஆண்டுக்கு $1 மில்லியன் ஈட்டும் தனிநபர் தொழில்முனைவோர் எண்ணிக்கை கூடியது

ஆண்டுக்கு $1 மில்லியன் ஈட்டும் தனிநபர் தொழில்முனைவோர் எண்ணிக்கை கூடியது

படம்: சாவ்பாவ்

24 Nov 2026 - 8:02 pm

2 mins read

சிங்கப்பூரில் ஊழியர்களின்றித் தனியாகத் தொழில் நடத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அவர்களில் சிறிய, ஆனால் வளர்ந்துவரும் பிரிவினர் ஆண்டுக்குக் குறைந்தது $1 மில்லியன் வருவாய் ஈட்டுகின்றனர்.

புள்ளிவிவரத் துறையும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வின்மூலம் இது தெரியவந்துள்ளது. 2014ல் 57,800ஆக இருந்த தனிநபர் தொழில்முனைவோரின் எண்ணிக்கை 2024ல் 89,800ஆக உயர்ந்தது.

தொழில்முனைப்பு வளர்ச்சி, மின்னிலக்கத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மின்வணிகம் ஆகியவற்றின் முன்னேற்றம் தொழில் தொடங்குவதையும் அதனை விரிவுபடுத்துவதையும் எளிதாக்கியுள்ளன.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) வெளியிடப்பட்ட சிங்கப்பூரின் மூன்றாம் காலாண்டுப் பொருளியல் ஆய்வறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசிக்கு முற்றிலும் சொந்தமான, ஊழியர்கள் இல்லாத பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களே ஆய்வின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. பதிவுசெய்யப்படாத தன்னுரிமை ஊழியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

2024ல் தனிநபர் தொழில்முனைவோரில் கிட்டத்தட்ட 3.4 விழுக்காட்டினர், அதாவது 3,100 பேர் குறைந்தது $1 மில்லியன் வருவாய் ஈட்டினர்.

ஐந்து விழுக்காட்டினர் $500,000 முதல் $1 மில்லியன் வரை ஈட்டினர்; 66 விழுக்காட்டினர் $100,000க்கும் குறைவாக வருவாய் ஈட்டினர்; 26 விழுக்காட்டினர் $100,000 முதல் $500,000 வரை வருவாய் ஈட்டினர்.

துறைவாரியாகப் பார்க்கையில், 2024ல் நிபுணத்துவச் சேவைத் துறையிலேயே ஆக அதிகமாக 20.3 விழுக்காட்டினர் இருந்தனர். அதனைத் தொடர்ந்து, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, கட்டுமானம், தகவல் தொடர்பு ஆகிய துறைகள் உள்ளன. நிபுணத்துவச் சேவையில் நிர்வாக ஆலோசனை 37 விழுக்காடும் உள்வடிவமைப்பு 10 விழுக்காடும் பிடித்துள்ளன.

தனிநபர் தொழில்முனைவோரில் முதியோர், பட்டதாரிகள், பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஐம்பது வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 25,000லிருந்து 44,100 ஆகவும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 20,400லிருந்து 42,500 ஆகவும் அதிகரித்துள்ளது. பெண்களின் பங்கு 33.2 விழுக்காட்டிலிருந்து 37.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. பெண்களிடையே தொழில்முனைப்பு ஆர்வம் வளர்ந்து வருவதை இது காட்டுகிறது.

தனிநபர் தொழில்முனைவோரின் பொருளியல் மதிப்பானது 2024ல் $3.85 பில்லியனாகப் பதிவானது. அது 2014ல் $2.13 பில்லியனாக இருந்தது. அனைத்து உள்நாட்டு நிறுவனங்களின் மொத்தப் பொருளியல் மதிப்பான $204.5 பில்லியனில் இது 1.9 விழுக்காடாகும். வரும் ஆண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் முதியோரும் பெண்களும் பொருளியல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. மேலும், நீக்குப்போக்குடன் பணியாற்றவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

குறிப்புச் சொற்கள்