சிங்கப்பூரில் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 333,204ஆக உயர்ந்தது.
இது, 2022ஆம் ஆண்டில் பதிவான 332,000ஐ காட்டிலும் கிட்டத்தட்ட 0.4 விழுக்காடு அதிகம்.
ஒப்புநோக்க, உலகளவிலான எண்ணிக்கை சென்ற ஆண்டு 58 மில்லியனுக்குக் குறைந்தது. 2022ஆம் ஆண்டில் அது 59.4 மில்லியனாக இருந்தது.
2023ல் உலக மக்கள்தொகையில் 1.5 விழுக்காட்டினர், ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது அதற்கும் மேல் நிகர மதிப்பு கொண்ட பெருஞ்செல்வந்தர்களாக இருந்தனர்.
சிறிய விகிதமாக இருந்தாலும், உலகின் பெருஞ்செல்வந்தர்கள், உலகளவிலான குடும்பச் சொத்தில் கிட்டத்தட்ட பாதிக்குச் சொந்தக்காரர்கள்.
அவர்களின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 214 டிரில்லியன் அமெரிக்க டாலராக (S$288.8 டிரில்லியன்) இருந்ததாக யுபிஎஸ் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்ட அதன் உலகச் சொத்து அறிக்கையில் தெரிவித்தது.
சுவிட்சர்லாந்து வங்கியான அது, இவ்வாண்டின் அறிக்கைக்காக ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு, ஐரோப்பா, சிங்கப்பூர் உட்பட ஆசிய பசிபிக் ஆகியவற்றில் உள்ள 56 சந்தைகளை ஆராய்ந்தது.
2022ஆம் ஆண்டில் உலகச் சொத்துகளில் 92 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை இந்தச் சந்தைகளில் இருப்பது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
வெவ்வேறு பொருளியல்களை எளிதில் ஒப்பிடுவதற்கு வசதியாக, இந்த ஆய்வில் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட்டது.
அமெரிக்காவில் ஆக அதிகமாக கிட்டத்தட்ட 22 மில்லியன் பெருஞ்செல்வந்தர்கள் இருந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. உலகப் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கையில் அது 38 விழுக்காடு.
சீனப் பெருநிலம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அங்கு ஏறக்குறைய 6 மில்லியன் பெருஞ்செல்வந்தர்கள் இருந்தனர்.
பிரிட்டன் மூன்று மில்லியன் பெருஞ்செல்வந்தர்களுடன் மூன்றாம் நிலையில் இருந்தது.
2023ல் சிங்கப்பூர் 333,204 பெருஞ்செல்வந்தர்களுடன் 22வது நிலையில் வந்தது. அது, உலகப் பெருஞ்செல்வந்தர்களின் எண்ணிக்கையில் 0.6 விழுக்காடு.
இந்தியா 14ஆம் இடத்தைப் பிடித்தது. அங்கு கிட்டத்தட்ட 870,000 பெருஞ்செல்வந்தர்கள் இருந்தனர். ஹாங்காங் 16வது நிலையில் வந்தது.
சென்ற ஆண்டு, சிங்கப்பூரில் உள்ள பெருஞ்செல்வந்தர்களின் கூட்டு நிகரச் சொத்து மதிப்பு $1.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.