உலகில் ஆகப் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூருக்கு என்றும் ஒரு தனி இடம் உண்டு. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ‘கெலப்’ (Gallup) சட்ட, ஒழுங்கு அறிக்கை, சிங்கப்பூரை உலகில் மிகவும் பாதுகாப்பான நாடாகப் பட்டியலிட்டது.
குறைவான குற்ற விகிதம், விரிவான கண்காணிப்புக் கட்டமைப்பு போன்றவற்றால் உலகை வியக்க வைத்த சிங்கப்பூரில் தனிநபர்கள் காணாமல் போகும் சம்பவங்கள் இன்னமும் ஒரு கறுப்புப் புள்ளியாக இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பூரில் மாயமாகின்றனர். சிலர் சில மணி நேரம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டனர். வேறு சிலர் சில நாள்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்டனர். இன்னும் சிலர் இன்னமும் தேடப்படுகின்றனர்.
2019ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் சிங்கப்பூரில் காணாமல் போனோர் குறித்து காவல்துறைக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை 5,072 என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் 2022ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு காணாமல் போனோர் குறித்து காவல்துறை அதிகாரிகள் 1,355 புகார்களைப் பெற்றனர். 2023ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 1,095 ஆக இருந்தது. 2022இல் அது 1,211 ஆக இருந்தது.
சிங்கப்பூரில் யார் வேண்டுமானாலும் காணாமற்போவதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக சிங்கப்பூர் மனநலச் சங்கம் கூறியது.
வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வெவ்வேறு சூழல்களால் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றார் மூத்த இணை ஆலோசகர் லீ ஐ லின்.
கல்வி ரீதியான உளைச்சல், பகடிவதை, குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் ஆகிய பதின்ம வயதினரிடையேயும் பெரியவர்களிடையேயும் உணர்வுரீதியான உளைச்சலை ஏற்படுத்தலாம் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய காரணங்களால் சிலர் காணாமற்போவதற்கு முடிவெடுக்கின்றனர் என்றார் திருவாட்டி லீ.
மூத்தோர் சிலரிடையே நிலவும் மறதிநோய் அவர்கள் காணாமற்போவதற்குக் காரணம் என்றும் மனநல நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
இத்தகைய சூழல்களைத் தவிர்க்க பராமரிப்பாளர்கள் பெரிதும் கைகொடுக்கின்றனர் என்ற அவர்கள், நல்ல குடும்பச் சூழலும் ஆதரவும் காணாமற்போகும் விகிதத்தைக் குறைக்க உதவும் என்றனர்.

