சிங்கப்பூரில் இரவு ஏழு மணிக்குப் பிறகு பராமரிப்புச் சேவை வழங்கும் பாலர்பள்ளிகளின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் தற்போது குறைந்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் கோ பெய் மிங் கூறியிருக்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டில் 40ஆக இருந்த அந்த எண்ணிக்கை, தற்போது 20க்குக் குறைந்துள்ளது.
பராமரிப்பு வழங்குவதற்கும், வேலைப் பொறுப்புகளுக்கும் இடையே சமநிலை காண்பதில் பெற்றோர் எதிர்நோக்கும் சவால்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு அங்கீகரிப்பதாக அமைச்சர் கோ கூறினார்.
வழக்கமான பாலர்பள்ளிச் செயல்பாட்டு நேரங்களைத் தாண்டி ஆதரவு தேவைப்படும் பெற்றோருக்கு மாற்று வழிகள் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாம் நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கையில் திரு கோ அந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
முழு நாள் சேவைகளை வழங்கும் பாலர்பள்ளிகள் வாரநாள்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செயல்படவேண்டும். இருப்பினும், அதைத் தாண்டிச் சேவைகளை வழங்குவதற்கான நீக்குப்போக்கு அவற்றுக்கு உண்டு.
கைக்குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் சேவை போன்ற கட்டணம் செலுத்தப்பட்ட, சமூக அடிப்படையிலான சேவைகள் பெற்றோருக்கான மாற்றுவழிகளில் அடங்கும்.
குடும்பத்துக்கு உகந்த வேலைச் சூழலை வழங்க, முதலாளிகளுக்கு ஊக்கமளிப்பதற்காக, அரசாங்கம் முத்தரப்புப் பங்காளிகளுடன் அணுக்கமாகச் செயல்பட்டுள்ளதாக திரு கோ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதன்மூலம், கடந்த 2024ஆம் ஆண்டில், நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளுக்கான கோரிக்கைகள் குறித்த முத்தரப்பு வழிகாட்டிகள் தொடங்கப்பட்டன.


