சென்ற ஆண்டு சொத்துச் சந்தை மெதுவடைந்தபோதிலும், இங்குள்ள சொத்துச் சந்தை நிறுவனங்களில் ஒட்டுமொத்த முகவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி நிலவரப்படி, சொத்துச் சந்தைத் துறையில் மொத்தம் 35,251 முகவர்கள் இருப்பதாக சொத்துச் சந்தை நிறுவனங்களுக்கான மன்றத்தின் ஆக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டின.
சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இருந்த 34,427 முகவர்களைக் காட்டிலும் அது அதிகம். 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்த எண்ணிக்கை 32,414ஆக இருந்தது.
‘புரோப்நெக்ஸ்’ தொடர்ந்து ஆகப் பெரிய சொத்துச் சந்தை நிறுவனமாகத் திகழ்கிறது. அதன் விற்பனைத் துறையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2023 ஜனவரியிலிருந்து கிட்டத்தட்ட 3 விழுக்காடு அதிகரித்து இவ்வாண்டு ஜனவரி 10ஆம் தேதி நிலவரப்படி 12,017ஆக இருந்தது.
இரண்டாவது பெரிய நிறுவனமாக உள்ளது ‘இஆர்ஏ’. தற்போது அதில் 8,918 முகவர்கள் இருக்கிறார்கள். முன்னதாக இருந்த 8,344 முகவர்களைக் காட்டிலும் அது அதிகம்.
அதனைத் தொடர்ந்து, மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது, ‘ஹட்டன்ஸ்’. அதில் 5,310 முகவர்கள் உள்ளனர்.
சென்ற ஆண்டு அந்தத் துறையில் 2,170 புதிய சொத்து முகவர்கள் சேர்ந்ததாக மன்றத்தின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
சென்ற ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, 2023இல் செல்லுபடியான பதிவைக் கொண்ட சொத்து முகவர்களில் 96 விழுக்காட்டினர் 2024ஆம் ஆண்டுக்கு அதனைப் புதுப்பித்தனர்.