சூதாட்டக்கூடம் செல்லும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் குறைந்துள்ளதாக சூதாட்ட ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது.
ஆணையம் அதன் வருடாந்தர அறிக்கையை வியாழக்கிழமையன்று (அக்டோபர் 2) வெளியிட்டது.
2023ஆம் ஆண்டில் சூதாட்டக்கூடத்துக்குச் சென்ற சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆகியோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 99,000ஆக இருந்தது.
இந்த எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 94,000ஆகக் குறைந்தது.
சூதாட்டக்கூடத்துக்குள் நுழைவதற்கான கட்டணத்தைச் செலுத்தும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரின் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது.
ஆண்டு நுழைவுக் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை 7,100லிருந்து 6,700ஆகச் சரிந்துள்ளது.
சூதாட்டக்கூடத்துக்குள் நுழைவதற்கான ஒருநாள் கட்டணம் $150. ஆண்டுக் கட்டணம் $3,000.
சிங்கப்பூரில் இரண்டு பெரிய சூதாட்டக்கூடங்கள் உள்ளன. அவை மரினா பே சேண்ட்ஸ், ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசா ஆகிய இடங்களில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சூதாட்டத்துக்கு அடிமையாகித் துன்புறும் சிங்கப்பூர்வாசிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாகவும் சீராகவும் (1.1%) இருப்பதாக 2023ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது. அந்த ஆய்வை சூதாட்டத்துக்கு அடிமையாகி துன்புறும் நிலையை எதிர்கொள்ளும் தேசிய மன்றம் நடத்தியது.
சூதாட்டக்கூட ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டமைப்பு தொடர்ந்து துரிதமாகச் செயல்படுவதை உறுதிசெய்ய புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று ஆணையத்தின் தலைவர் டான் டீ ஹாவ் தெரிவித்தார்.
சூதாட்டத்துக்கு அடிமையாகக்கூடியவர்கள், சூதாடும்போது வழக்கத்துக்கு மாறான நடத்தையைக் கொண்டுள்ளவர்கள் ஆகியோரை முன்னதாகவே கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், சூதாட்டத்துக்கு அடிமையாகும் பிரச்சினையை எதிர்கொள்ள சூதாட்டக்கூடங்களை நடத்தும் நிறுவனங்களுடன் மிக அணுக்கமாக இணைந்து செயல்படுவதாகத் திரு டான் தெரிவித்தார்.