அண்மையில் டாக்சிகள், தனியார் வாடகை கார்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு அவற்றின் பயணங்கள் அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களின் வருமானம் குறைந்துள்ளதாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கும் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தனியார் வாடகை கார்கள், டாக்சிகளின் எண்ணிக்கை 8 விழுக்காடு உயர்ந்தது.
இருப்பினும், அதே காலகட்டத்தில் சராசரி அன்றாடப் பயணம் ஒரு விழுக்காடு மட்டுமே ஏற்றம் கண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
“இதன் விளைவாகச் சில ஓட்டுநர்களின் வருமானம் குறையும்,” என்று டாக்டர் கோர் செப்டம்பர் 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேவைக்கு ஏற்ப உயரும் கட்டணங்கள், வழக்கமான நிகர கட்டணம் 2023ஆம் ஆண்டின் முற்பாதியில் சரிந்ததை டாக்டர் கோர் சுட்டினார்.
2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவை உச்சத்தில் இருந்ததாக அவர் கூறினார்.
தற்போதைய கட்டணங்கள் 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இருந்ததைப்போல உள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆறு மாதங்களில் தங்களது வருமானம் குறைந்திருப்பதாக கிராப், கோஜெக் ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதையும் மற்ற தளங்கள் மூலம் வரும் தொழில் போட்டியையும் அவர்கள் சுட்டினர்.
கொவிட்-19 நெருக்கடிநிலை முடியும் கட்டம், விழாக் காலங்கள், சிங்கப்பூரில் நடைபெற்ற இசைநிகழ்ச்சிகள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று டாக்டர் கோர் கூறினார்.
அப்போது டாக்சி, தனியார் வாடகை கார்களுக்கான தேவை அதிகமாக இருந்ததாகவும் ஓட்டுநர்கள் அதிகம் சம்பாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“எனவே, மொத்த வருமானம் குறித்து ஆராயும்போது குறுகிய காலகட்டத்தை மட்டுமே பார்க்கக்கூடாது, குறிப்பாக கட்டணங்கள் குறைவாக இருக்கும் காலகட்டங்களை மட்டுமே பார்க்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.
டாக்சி, தனியார் வாடகை கார் தொழில் சுமுகமாகவும் துரிதமான முறையிலும் இயங்க எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என்பது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் தொடர்ந்து பரிசீலனை செய்யும் என்று டாக்டர் கோர் தெரிவித்தார்.

