தென்கொரியாவில் நிறுவன வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: துணைப் பிரதமர் ஹெங்

2 mins read
e5038e24-727c-4dad-a935-57111dfe08a4
தென்கொரியாவின் புத்தொழில்முனைவோரையும் முதலீட்டாளர்களையும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலக்கோடி) சந்தித்துப் பேசினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

தென்கொரியாவில் துடிப்புமிக்க நிறுவனச்சூழல் நிலவுவதாகவும் வாய்ப்புகளும் வளங்களும் அங்கு கொட்டிக் கிடப்பதாகவும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.

திரு ஹெங், இம்மாதம் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தென்கொரியப் பயணம் மேற்கொண்டு இருந்தார்.

பயணமுடிவில் தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

தென்கொரியாவில் புத்தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள் போன்றோரைத் தாம் சந்தித்ததாக திரு ஹெங் அந்தப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றால் சிறப்புடன் இயங்கும் தென்கொரியாவின் ‘புதிய பொருளியல்’ குறித்த பயன்மிக்க தகவல்களை அவர்கள் தம்மிடம் பகிர்ந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

“தென்கொரியக் குடியரசின் புதிய பொருளியலுடன் இணைந்து, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்ற நமது உள்ளூர் கல்வி நிறுவனங்கள் துடிப்புடன் செயல்பட்டு ஒத்துழைப்பை வழங்குகின்றன.

“புதிய சாதனைகள் பல அங்கு நிகழ்த்தப்படும் என்பதை நான் எதிர்பார்க்கிறேன்.

“தென்கொரியாவில் உள்ள பட்டதாரிகளில் ஏறத்தாழ 10 விழுக்காட்டினர் கலை தொடர்பான பாடங்களைப் படிப்பதாக அறிந்தேன். அங்குள்ள கே-பாப் போன்ற படைப்புத் துறைகளுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் திறனாளர்களை அந்தப் படிப்புகள் வழங்குகின்றன.

“படைப்புத் தொழில்துறைக்குத் தேவைப்படும் திறன் அங்கு வளர்க்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

“சிங்கப்பூரில் கலைப் பல்கலைக்கழகத்தில் இவ்வாண்டு சேர்க்கை நடைபெற உள்ளது,” என்று கூறியுள்ளார் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான திரு ஹெங்.

திரு ஹெங், தமது பயணத்தின்போது தென்கொரிய துணைப் பிரதமர், விஞ்ஞான, தொழில்நுட்பத் தலைவரின் மூத்த செயலாளர், கொரிய வங்கி ஆளுநர் போன்றோரைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

அத்தகைய சந்திப்புகள் சிங்கப்பூருக்கும் தென்கொரியாவுக்கும் இடையிலான வலுவான, நீடித்த பங்காளித்துவ உறவை மறுஉறுதிப்படுத்தியதாக வியாழக்கிழமை (நவம்பர் 21) வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்