பாலர் பள்ளி ஒன்றில் இரண்டு வயது சிறுமியை அங்கு பணிபுரிந்த சமையல்காரர் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தினார். அச்செயல் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
இந்நிலையில், கண்காணிப்புக் கேமரா கட்டமைப்பை மாற்றியமைக்க இணக்கம் தெரிவித்த அப்பாலர் பள்ளியின் முன்னாள் முதல்வருக்கு புதன்கிழமையன்று (ஏப்ரல் 1) 10 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டியோ குவான் ஹுவாட் என்பவரால் இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்த தகவலைத் தெரிந்தே மறைத்ததாக அந்த 62 வயது பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதை அவர் ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பளிப்பதற்கு முன் பேசிய மாவட்ட நீதிபதி ஷர்மிளா ஸ்ரீபதி-ஷனாஸ், முன்னாள் முதல்வர் நம்பிக்கைக்குரிய ஒரு பொறுப்பில் இருந்தும், அந்த நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறிவிட்டாதாகக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளியான 61 வயது டியோவுக்கு, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒன்பது ஆண்டுகள், நான்கு மாதங்கள் மற்றும் ஏழு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாலர் பள்ளியில் நடந்த மிக மோசமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் இதுவும் ஒன்று என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டியோ, மூன்று மானபங்கக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். மலேசியரான அவர், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் உறங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த அறையில் ஒன்று முதல் இரண்டு வயதுடைய மூன்று சிறுமிகளைப் பாலியல் ரீதியில் துன்புறுத்தினார்
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை மாற்றியமைத்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பெண்களில் ஒருவராக இந்த முன்னாள் முதல்வரும் இருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, அந்தப் பெண்கள் மற்றும் பாலர் பள்ளி தொடர்பான விவரங்களை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

