தாதியருக்கு அதிகாரம் அளிப்பது என்பது அவர்களுக்கு உரிமை, வளங்கள், ஆதரவு முதலியவற்றை வழங்குவதே என்று சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் வியாழக்கிழமை (ஜூன் 25) கூறியுள்ளார்.
தாதியர், பராமரிப்புப் பணிகளைச் செயல்படுத்துவோராக மட்டுமன்றி, அவற்றை வடிவமைப்பவர்களாக மாறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
சிங்கப்பூர் எக்ஸ்போவில் ஜூன் 25 முதல் 27 வரை நடைபெறும் 9வது ஆசிய பசிபிக் தாதியர் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணை அமைச்சருமான திருவாட்டி ரஹாயு பேசினார். தாதியர் பலர், மருத்துவக் குழுக்களை வழிநடத்தி, பராமரிப்புச் சேவைகளை வடிவமைத்து, புத்தாக்க நடவடிக்கைகளை ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் சமூகச் சுகாதார நிலையங்கள், ‘ஹெல்தியர் எஸ்ஜி’ போன்ற திட்டங்களின்வழி நோய்த் தடுப்புப் பராமரிப்பில் தாதியர் முக்கியப் பங்காற்றுவதை அவர் சுட்டினார்.
குடியிருப்பாளர்களுக்கு என தனிப்பட்ட சுகாதாரத் திட்டங்களை உருவாக்குதல், பரிசோதனைகளை நடத்துதல், நாட்பட்ட நோய்களை நிர்வகித்தல், நோயாளிகளைச் சமூகப் பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைத்தல் முதலியவற்றில் தாதியர் துடிப்புடன் பங்காற்றுவதாக அவர் சொன்னார்.
எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஊழியரணியை உருவாக்க வேண்டும்; அதற்குச் சுகாதாரக் கட்டமைப்புகளின் மின்னிலக்க உருமாற்றத்தில் தாதியரை ஈடுபடுத்துவது முக்கியம் என்பதைத் திருவாட்டி ரஹாயு வலியுறுத்தினார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தில் சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புகள் கடுமையான நெருக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. மூப்படைந்த மக்கள்தொகை, அதிகரிக்கும் நாட்பட்ட நோய்கள், ஊழியர் பற்றாக்குறை, அதிவேகத் தொழில்நுட்ப மாற்றம் முதலியவை அதற்குக் காரணங்கள். உலகில் ஆக வேகமாக மூப்படையும் மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இங்கு, சுகாதாரப் பராமரிப்புக்கான தேவைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.
பராமரிப்புக் குழுக்களின் புத்தாக்கமிக்க தலைவர்களாகவும் சிறந்த செயல்திறன் கொண்டவர்களாகவும் செயல்படுவதில் தாதியருக்கு ஆதரவளிக்கச் சிங்கப்பூரின் சுகாதாரக் கட்டமைப்புகள் தொடர்ந்து உறுதியுடன் இருப்பதாகத் திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.

