சுகாதார, பாதுகாப்புக் குறைபாடுகளுக்காகப் பிடிபட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு தனது செயல்பாடுகளைச் சீரமைத்திருந்த ‘விண்ட்சர் கான்வலசென்ட் ஹோம்’ தாதிமை இல்லம், மீண்டும் விதிமுறைகளை மீறியுள்ளது.
இல்லவாசிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலான கடுமையான குறைபாடுகள், முறையான தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டை உறுதிசெய்யத் தவறியது உள்ளிட்ட பல பிரச்சினைகளால் அந்த இல்லம் உரிமத்தை இழந்தது.
அங்கு தங்கியிருப்பவர்களை மற்ற தாதிமை இல்லங்களுக்கு மாற்றுவதற்கு அந்த இல்லத்திற்கு நான்கு மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பாசிர் பாஞ்சாங்கில் உள்ள அந்த இல்லத்தில் 2024 டிசம்பரில் நடத்தப்பட்ட தணிக்கையின்போது மருத்துவ, தாதியர் பராமரிப்பு, மருந்து மேலாண்மை ஆகியவற்றில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
2025 ஏப்ரலுக்குள் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருந்தது என அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார். இருப்பினும், அந்த இல்லத்தில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்த விதிமீறல்கள் குறித்து அமைச்சு கவலை கொண்டிருந்தது.
இதனால், திருத்தப்பட்ட நடைமுறைகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு, அவை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் பொருட்டு, அமைச்சு அந்த இல்லத்தைக் கூர்ந்து கண்காணித்து வந்தது.
ஆனால், அந்த மாற்றங்கள் குறுகிய காலமே நீடித்தன.
ஏப்ரலில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தணிக்கையில், சீர்திருத்தங்கள் தொடராததும் பல விதிமீறல்கள் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டுள்ளதும் அம்பலமானது என்று அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இவற்றுடன், இல்லத்தின் முக்கியப் பொறுப்பாளர்களிடம் போதிய கட்டுப்பாடும், முறையான கண்காணிப்பும் இல்லாதது நிலைமையை மோசமாக்கியது.
உதாரணமாக, கீழே விழுவது, படுக்கைப் புண்கள் ஏற்படுவது, உடல் எடைக்குறைவு போன்றவற்றில் இல்லவாசிகளுக்கான தகுந்த மறுஆய்வுகளைச் செய்ய இல்லம் தவறியது.
மேலும், இல்லவாசிகளுக்கான பராமரிப்புத் திட்டங்களைப் பின்பற்றத் தவறியதோடு, மருந்துகளைச் சரியாக வழங்காமலும் தவறான அளவில் கொடுத்தும், காலாவதியான மருந்துகளைப் பயன்படுத்தியும் மருந்து நிர்வாகத்தில் அலட்சியம் காட்டியது.
அத்துடன், இல்லவாசிகளுக்குத் தேவையான அடிப்படைத் தூய்மைப் பராமரிப்பை வழங்கவும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப முறையான ஊட்டச்சத்து உணவுகளை அளிக்கவும் இல்லம் தவறிவிட்டதாக அமைச்சு கூறியது. இல்லவாசிகளுக்காக உணவு சமைக்கப் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களும் காலாவதியானவை என்பது சோதனையில் தெரியவந்தது.
தொற்றுத் தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியதுடன், இல்லப் பராமரிப்புச் செயல்முறைகளில் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் அது தவறிவிட்டது.
1999ல் தொடங்கப்பட்ட இல்லம், 45 படுக்கை வசதிகளுடன் கூடிய தாதிமை இல்லத்தை நடத்துவதற்கான உரிமத்தைப் பெற்றிருந்தது. தற்போது அந்த இல்லத்தில் 25 பேர் தங்கியுள்ளனர்.

