சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட செயற்கை நுண்ணறிவைக்கொண்டு செயல்படும் தலையில் அணியும் கருவியொன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
அதைக்கொண்டு பார்வையிழந்தோருக்கு அறிவுரைகளும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு, அவர்கள் கடைகளில் பொருள்களை வாங்கலாம், பேருந்துகளிலும் வாடகை வாகனங்களிலும் பயணம் செய்யலாம்.
ஆய்வாளர்கள் கடந்த 2024ஆம் ஆண்டில் ‘ஐசீ’ (AiSee) என்றழைக்கப்படும் அதன் மாதிரி வடிவத்தை வெளியிட்டனர்.
ஒருவரின் இயற்கையான குரலைக் கொண்டு மாற்று வழிகளில் செயலாற்றும் ‘ஓப்பன்ஏஐ’யின் ‘ஜிபிடி’, ‘கூகல்’-இன் ‘ஜெமினி’ போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுச் செயலிகளை ஆய்வுசெய்து அவற்றின் அடிப்படையில் கருவியை மேம்படுத்தி வடிவமைத்துள்ளனர் ஆய்வாளர்கள்.
இணையம் வழியாக பயனாளரின் தொலைபேசியுடன் ஒருங்கிணைந்து ‘ஐசீ’ செயல்படுகிறது. எதிர்காலத்தில் சிம் அட்டைகளுடனும் அது செயலாற்ற ஆய்வுக் குழு பணியாற்றுகிறது.
ஆய்வுக் குழுவின் தலைவர் இணைப் பேராசிரியர் சுரங்கா நாணயக்காரா கடந்த பத்து ஆண்டுகளாக அதன் வடிவமைப்புக்காக ஒரு குழுவை வழிநடத்திவந்துள்ளார். அதன் வர்த்தகத்தையும் தற்போது ஆய்வுக்குழு திட்டமிட்டுவருகிறது. ஒரு கருவி $380 என்ற விலையில் விற்கப்படுகிறது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின்கீழ் செயல்படும் தேசிய உடற்குறை உள்ளோருக்கான அமைப்பின் அங்கீகாரத்தை ஆய்வுக் குழு எதிர்பார்த்துள்ளது. அந்த அமைப்பு வழங்கும் சலுகைகளால் கருவியின் விலைகள் குறையும் வாய்ப்புள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பல்கலைக்கழக ஆய்வுக் குழு பூமலை நிர்வாகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலாக்களில் வழிகாட்ட கருவி சோதிக்கப்பட்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பார்வையிழந்தோர் மட்டுமல்லாமல் அனைவரும் ‘ஐசீ’ கருவியைப் பயன்படுத்தும் விதமாக அதன் விற்பனை உத்திகள் வழங்கப்படுகின்றன. கருவியில் கண்களாக கேமராவும் காதுகளாக ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளன. உதாரணமாக, அதனைக் கொண்டு நிலப் போக்குவரத்து ஆணையத் தரவுகளுடன் ஒருங்கிணைந்து, பேருந்துகள் வந்துபோகும் நேரம் கணிக்கப்பட்டு, பயனாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

