சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
என்யுஎஸ் என்டர்பிரைஸ், எஸ்ஜி வளர்ச்சி மூலதனத்துடனும் என்டர்பிரைஸ் சிங்கப்பூருடனும் இணைந்து ஒரு புதிய இணை முதலீட்டுக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், என்யுஎஸ் என்டர்பிரைஸ், லோட்டஸ் சிங்கப்பூர் குழுமத்தின் ஒரு பகுதியான லோட்டஸ் வொன் இன்வெஸ்ட்மென்ட் தனியார் நிறுவனத்துடன், என்யுஎஸ் துணை நிறுவனங்கள், வளர்ந்துவரும் நிறுவனங்களில் முதலீடு (venture capital) ஆகிய இரண்டிற்கும் கூட்டாக ஆதரவளிப்பதற்காக $20 மில்லியன் இணை முதலீட்டு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது.
என்யுஎஸ் என்டர்பிரைஸ் 2001ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 4,300 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து 3,000க்கும் மேற்பட்ட புதிய நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 16) நடந்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஐகியூப் கட்டடத்தின் திறப்புவிழாவில் இந்த முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
தொழில்முனைவோர் ஒத்துழைப்பு, ஆழமான தொழில்நுட்ப புத்தாக்கத்திற்கான ஒரு மையமாக ஐகியூப் கட்டடம் செயல்படுகிறது.
இந்தத் திட்டங்களுக்குத் துணையாக என்யுஎஸ் என்டர்பிரைஸ், ஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்துடன் $2 மில்லியன் மதிப்பிலான ஒரு முன்னோடி கூட்டுமுயற்சியையும் அறிவித்துள்ளது.
ஐகியூப் கட்டடத்தின் திறப்புவிழாவில் துணைப் பிரதமரும், வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
சிறப்புரையாற்றிய அவர், இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூரில் நிலையான முதலீடுகள்தான் நாட்டின் நீடித்த போட்டித்திறன்களில் ஒன்றாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.
“நமது வலுவான அறிவியல் அறிவுத்தளம்தான் நமது பொருளியலை மாற்றியமைக்கவும், மேம்பட்ட உற்பத்தி, புதிய தொழில்நுட்பங்கள் போன்ற அதிக மதிப்பு கூட்டப்பட்ட நடவடிக்கைகளுக்கு மாறவும், நமது மக்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவியுள்ளது,” என்று திரு கான் கூறினார்.
ஆராய்ச்சி மட்டும் போதாது என்ற அவர், அதன் முழு மதிப்பையும் வெளிக்கொணர அறிவைப் பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்த்து, சமூகத்தின் உண்மையான தேவைகளை நிறைவுசெய்து, வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவ்வாண்டுத் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட தேசிய பட்டதாரி ஆராய்ச்சி புத்தாக்கத் திட்டம் பற்றி பேசிய திரு கான், அது 2028க்குள் 300 புதிய நிறுவனங்களுக்கும் 2030க்குள் 150க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களுக்கும் பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஐகியூப் கட்டடம் அதைச் செயல்படுத்த வழியமைக்கும் என்ற திரு கான், தொழில்முனைவோரை வளர்த்தெடுக்க, முன்மாதிரிகளை தயாரிப்புகளாகவும், திட்டங்களை நிறுவனங்களாகவும், யோசனைகளை வணிகங்களாகவும் மாற்றுவதற்குத் துணிபவர்களை உருவாக்க வேண்டும் என்றார்.
“புதிய நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களாக வளர்ந்து, தயாரிப்புகள், சேவைகளைப், பெரிய அளவில் வழங்கி, சிங்கப்பூருக்கு நல்ல வாய்ப்புகளையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மனித மூலதனத்தின் தரத்தை உயர்த்தவும், மக்களை முழுமையாக மேம்படுத்தவும், உலகளவில் போட்டித்தன்மையுடன் இருக்கவும், கல்வி ஆராய்ச்சியில் தொடர்ந்து திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும் என்றும் திரு கான் வலியுறுத்தினார்.