சுகாதாரப் பராமரிப்புத் துறை, மின்னிலக்க, செயற்கை நுண்ணறிவை அதிகம் சார்ந்துவரும் நிலையில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) யோங் லூ லின் மருத்துவப் பள்ளி புதிய ஒருங்கிணைந்த தாதிமை-நடைமுறைத் தகவல் தொழில்நுட்ப (nursing-informatics) பட்டக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
மாறிவரும் சூழலில் தாதியருக்குக் கூடுதல் நிபுணத்துவ, தலைமைத்துவப் பொறுப்புகளை வழங்க உதவுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின்கீழ் ஏலிஸ் லீ தாதிமை நிலையம் வழங்கும் இப்பாடத் திட்டம், தற்போது வழங்கப்பட்டுவரும் தாதிமை இளநிலை அறிவியல் ஆனர்ஸ் (BSc Honours) பட்டக் கல்வி, உயிரியல் மருத்துவ நடைமுறைத் தொழில்நுட்ப முதுநிலை அறிவியல் பட்டக் கல்வி ஆகியவற்றை ஒன்றிணைக்கும். புதிய பாடத் திட்டம் நிபுணத்துவத் தாதிமைக் கல்வியுடன் உயிரியல் மருத்துவ நடைமுறைத் தகவல் பாடத்தை இணைக்கும். இதன்கீழ், தரவு பகுப்பாய்வு (data analytics), மருத்துவத் தகவல் முறை வடிவமைப்பு மற்றும் நிர்வாகம் போன்ற பாடங்கள் இடம்பெறும்.
நான்கரை ஆண்டுகள் நீடிக்கும் இந்தப் பட்டக் கல்விப் பாடத் திட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும். அப்போது ஏறக்குறைய 20 மாணவர்கள் முதன்முறையாக இத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
புதிய தாதிமை-நடைமுறைத் தொழில்நுட்பப் பட்டக் கல்விப் பாடத் திட்டம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) அறிமுகப்படுத்தப்பட்டது. என்யுஎஸ் கலாசார நிலையத்தில் நடைபெற்ற கிழக்கு ஆசிய தாதிமை உபகாரச் சம்பளப் பெறுநர் மாநாட்டின் (East Asian Forum of Nursing Scholars 2026) தொடக்க நிகழ்ச்சியில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் பகுப்பாய்வு அல்லது மருத்துவ நிர்வாகத்தில் சிறப்பு நிபுணத்துவம் (specialisations) பெறலாம். முதுநிலைப் பட்டக் கல்வியின் ஓர் அங்கமாக சார்புச் சுகாதாரம் (allied health), கணினியியல், பொறியியல் போன்ற மற்ற துறைகளில் பயிலும் மாணவர்களோடு இணைந்து இம்மாணவர்கள் கற்றலில் ஈடுபடுவர்.
இது, நவீன சுகாதாரப் பராமரிப்புக் குழுக்களில் பலவகை அம்சங்கள் இடம்பெறுவதைச் சித்திரிப்பதாக என்யுஎஸ் மருத்துவப் பள்ளி ஊடக அறிக்கையில் குறிப்பிட்டது.

