என்யுஎஸ்: ஆகஸ்ட்டில் புதிய தங்குமிடக் கல்லூரி

2 mins read
செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும்
366a006a-03a6-4330-8a49-83b5bf492027
முதல் ஆண்டில், புதிய தங்குமிடக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் 100 பேரும் தங்கியிருப்பர். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), இந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் அதன் ‘யுனிவெர்சிட்டி டவுன்’ வளாகத்தில் புதிய தங்குமிடக் கல்லூரியைத் திறக்கவிருக்கிறது.

‘அகேஷியா காலேஜ்’ என்பது அதன் பெயர்.

என்யுஎஸ் வளாகத்தினுள் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தும் முதல் தங்குமிடமாக இது விளங்கும்.

தொடக்க ஆண்டில், இளநிலை முதலாண்டு பயிலும் மாணவர்கள் 100 பேருக்கு இதில் தங்குமிடம் வழங்கப்படும். நடவடிக்கைகளுக்கும் புதிய மாணவர்களுக்கான வழிகாட்டுதலுக்கும் ஆதரவு தரும் பொருட்டு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 100 பேர் தொடக்க ஆண்டில் இதில் தங்கியிருப்பர்.

2026ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் இதில் தங்கும் மொத்த மாணவர் எண்ணிக்கை 600ஆக இருக்கும்.

தேசியப் பல்கலைக்கழகத்தில் தற்போது இத்தகைய நான்கு தங்குமிடக் கல்லூரிகள் செயல்படுகின்றன. அவற்றில் மொத்தம் 2,250 மாணவர்கள் தங்கிப் பயில்கின்றனர்.

மேலும், ‘ஹால்’ எனப்படும் ஆறு மாணவர் விடுதிகளும் என்யுஎஸ்சில் உள்ளன. அங்கும் மாணவர்கள் பலர் தங்கியுள்ளனர்.

தங்குமிடக் கல்லூரி என்பது ஈராண்டுத் திட்டமாகும். இதில் வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றுகூடி, பல்வேறு துறைகள் சார்ந்த வகுப்புகளைச் சிறு குழுக்களாகப் பயில்வர்.

எடுத்துக்காட்டாக, 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ரிட்ஜ் வியூ’ தங்குமிடக் கல்லூரியின் மாணவர்கள், நீடித்த நிலைத்தன்மை, வேலையிடத் தயார்நிலை ஆகியவை குறித்துப் பயில்கின்றனர்.

புதிய ‘அகேஷியா காலேஜ்’ தங்குமிடக் கல்லூரியின் மாணவர்கள், செயற்கை நுண்ணறிவுத் திறனுக்கான பாடங்களைப் பயில்வர்.

மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் தொடர்புடைய விவகாரங்கள் பற்றிய ஆய்வு, மதிப்பீட்டுச் சிந்தனையை வளர்க்கும் வகுப்பும் அவர்களுக்குக் கட்டாயம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்