கார் சக்கரங்களில் காற்றை வெளியேற்றிய என்யுஎஸ் மாணவர் கைது

1 mins read
042334d6-9289-48f2-9eff-a989b3fee297
கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் சக்கரங்களில் இருந்த காற்று வெளியேறி இருப்பதைக் கண்ட அந்தக் காரின் உரிமையாளர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். - படங்கள்: சிங்கப்பூர் காவல்துறை

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள இரு அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து கார்களின் சக்கரங்களில் இருந்த காற்றை வெளியேற்றிய குற்றத்திற்காகச் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக (என்யுஎஸ்) மாணவர் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்களுக்குத் தொல்லை தரும் வகையில் நடந்துகொண்டதாக 23 வயது பெஞ்சமின் சியா யிட் லூங்மீது வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) குற்றம் சுமத்தப்பட்டது.

நவம்பர் 19ஆம் தேதி காலை 10 மணிக்கும் பிற்பகலுக்கும் இடைப்பட்ட நேரத்தில் உட்லண்ட்ஸ் டிரைவ் 14ல் உள்ள புளோக் 517A, புளோக் 519A ஆகிய பகுதிகளில் இருக்கும் அடுக்குமாடி கார் நிறுத்துமிடங்களில் இக்குற்றத்தை அவர் புரிந்ததாகக் கூறப்பட்டது.

மேலும், ஐந்து கார்களின் கண்ணாடிகளில் துண்டறிக்கை ஒன்றை சியா வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அவருடைய இந்த நடவடிக்கைகள் பொதுமக்களுக்குத் தொல்லைத் தரும் வகையில் இருந்ததாகக் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டது.

உட்லண்ட்ஸ் காவல் பிரிவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சியா, காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சியாவைப் பிணையில் விடுவிக்க $5,000 பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் விடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் உள்ள புகைப்படத்தின்படி, விளையாட்டுப் பயன்பாட்டு வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான ஒரு பருவநிலை ஆர்வலர் குழுவின் பெயரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கு விசாரணை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்