பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்ட சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக (NUS) மாணவர் ஒருவருக்கு $6,800 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சீனாவைச் சேர்ந்த சன் ஸிங்க்யு, 22, எனப்படும் அந்த மாணவர், பல்கலைக்கழக விளையாட்டு மையத்தில் உள்ள நீச்சல் குள உடைமாற்றும் அறையில் பல தடவை திருடினார்.
இவ்வாண்டு ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் $1,700க்கும் மேலான ரொக்கப் பணத்தையும் பொருள்களையும் அவர் திருடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் அவ்வாறு ஒன்பது முறை திருடினார்.
ஒன்றுக்கும் மேற்பட்ட ‘ஆப்பிள் ஏர்போட்’ (Apple AirPod) சாதனங்களை அவர் திருடினார். பணத்தையும் பொருள்களையும் பறிகொடுத்த மாணவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
தம் மீது சுமத்தப்பட்ட ஒன்பது குற்றச்சாட்டுகளில் மூன்றை அவர் ஒப்புக்கொண்டார். இதர குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
குற்றங்களை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அந்த மாணவருக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 23) $6,800 அபராதம் விதிக்கப்பட்டது.
அவரிடம் இருந்து $1,500க்கும் மேலான பணமும் பொருள்களும் மீட்கப்பட்டுவிட்டன. மேலும் $150 பணத்தை அவர் திருப்பித் தந்துவிட்டார்.
ஒவ்வொரு திருட்டுக் குற்றத்துக்கும் மூன்றாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.