மத்திய கிழக்குப் பூசலால் தென்னாப்பிரிக்காவில் சிக்கிய என்யுஎஸ் குழு

மத்திய கிழக்குப் பூசலால் தென்னாப்பிரிக்காவில் சிக்கிய என்யுஎஸ் குழு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

05 Mar 2026 - 5:56 pm

2 mins read

மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் பூசலால் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் எனக் கிட்டத்தட்ட 30 பேர், தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சிக்கியுள்ளனர்.

பிப்ரவரி 20ஆம் தேதி, கள ஆய்வுக்காக அந்தக் குழு ஜோகனஸ்பர்க்கிற்குச் சென்றதாக அங்குச் சென்ற மாணவர் ஒருவரின் பெற்றோர் தெரிவித்தார்.

அந்தக் குழு, மார்ச் 2ஆம் தேதி கத்தாரின் டோஹா வழியாகச் சிங்கப்பூருக்குத் திரும்பவிருந்தது. ஆனால் மத்திய கிழக்கில் மூண்ட அண்மைய பூசலால் குழுவின் பயணம் தடைப்பட்டது.

இதற்கிடையே, மாற்றுவழியாகக் குழுவைச் சிங்கப்பூருக்குக் கொண்டுவருவதற்கான பயணச்சீட்டுகளை எஃப்சிஎம் (FCM) பயண முகவர் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

எத்தியோப்பியா, மும்பை வழியாகச் சிங்கப்பூர் திரும்ப மார்ச் 3ஆம் தேதி, கென்யாவின் நைரோபியிலிருந்து ஜோகனஸ்பர்க் சென்ற குழு, பயணச்சீட்டுகளைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால் ஜோகனஸ்பர்க்கில் சிக்கிக்கொண்டது.

அதையடுத்து, எஃப்சிஎம் நிறுவனம் இடி638 என்ற எத்தியோப்பிய விமானம் மூலம் மாணவர்கள் அடங்கிய குழுவை சிங்கப்பூருக்கு அழைத்துவர ஏற்பாடு செய்தது. அந்தக் குழு மார்ச் 5ஆம் தேதி, பிற்பகல் 2.50 மணியளவில் சிங்கப்பூரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானத்திற்குக் காத்திருந்த குழுவுக்கு எஃப்சிஎம் நிறுவனம் விமான நிலைய ஹோட்டலில் தங்குமிடவசதிகளை ஏற்பாடு செய்தது.

ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதை அடுத்து பிப்ரவரி 28ஆம் தேதி கத்தார் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள் அவற்றின் ஆகாயவெளியில் விமானங்கள் பறந்துசெல்வதைத் தடைசெய்தன.

பல்வேறு விமான நிறுவனங்கள் விமானச் சேவைகளை ரத்து செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

கொவிட்-19 காலக்கட்டத்துக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் விமானச் சேவைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்மாணவர்தென்னாப்பிரிக்கா