தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்கலைக்கழகத்தைச் சுற்றிக் காட்ட 74 என்யுஎஸ் மாணவர்களுக்குப் பயிற்சி

2 mins read
7f9c6d3f-db76-4c3f-bc50-901752e99e0b
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிப் பார்க்க சுற்றுப்பயணிகள் பலர் அங்கு செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துக்கு (என்யுஎஸ்) விருந்தினர்கள் அல்லது சுற்றுப்பயணிகள் செல்லும்போது பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றிக் காட்ட அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 74 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

பல்கலைக்கழக வளாகத்துக்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருகின்றனர் என்றும் சுற்றுப்பயணிகளின் போக்குவரத்தை நிர்வகிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 14) என்யுஎஸ் வெளியிட்டது.

சுற்றுலா வழிகாட்டிகளாகச் செயல்படப் பயிற்சி பெற்றுள்ள இந்த மாணவர்களின் தலைமையின்கீழ் ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி வரை நடைபெறும் சுற்றுலாக்களில் கலந்துகொள்ள விரும்பும் விருந்தினர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று என்யுஎஸ் தெரிவித்தது.

முன்பதிவு செய்துகொள்ளும் சுற்றுப்பயணிக் குழுக்கள் தங்களது பேருந்து உரிமப் பலகை எண் தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜனவரியிலிருந்து பிப்ரவரி வரை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுப்பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் சுற்றுப்பயணிகள் போக்குவரத்தை நிர்வகிக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழக வளாகச் சுற்றுலாவில் கலந்துகொள்ளும் சுற்றுப்பயணிகள் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

விருந்தினர்களை எளிதில் அடையாளம் காண அவர்களுக்குச் சிறப்பு அடையாளச் சாதனம் தரப்படும்.

ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து மின்னிலக்க வளாக அனுமதிச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்துக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாத நேரங்களில் அதிகாரபூர்வ விருந்தினர்களும் விநியோக ஊழியர்களும் அதைப் பயன்படுத்தலாம்.

ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி வரை வாரநாள்களில் முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை பல்கலைக்கழக உணவு நிலையங்களுக்குச் செல்ல விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோல காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் வழங்கப்படும் பேருந்துச் சேவைகளை அவர்கள் பயன்படுத்த முடியாது.

இதை உறுதிசெய்ய பாதுகாவல் அதிகாரிகளுடன் மாணவர்களைக் கொண்ட குழு ஒன்று இணைந்து செயல்படுகிறது.

குறிப்புச் சொற்கள்