பள்ளிகளுக்கு மத்திய சமையல் கூடத்திலிருந்து உணவு விநியோகிப்பது எளிதானது மட்டுமல்ல, உணவின் தரமும் உறுதி செய்யப்படுகிறது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
பள்ளியில் உள்ள உணவகங்களில் உணவுக் கடைக்காரர்களை அமர்த்துவது சிரமமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்தின் தரத்தை நிலைநாட்டுவதிலும், கழிவுகளைக் குறைப்பதிலும் பிரச்சினை இருக்கிறது. இதற்கு மாற்று ஏற்பாடாகத்தான் மத்திய சமையல்கூடம் பற்றி ஆராயப்பட்டது என்றார் அமைச்சர்.
மத்திய சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கப்படுவதால் சத்து குறைவாக இருக்கும் என்ற எண்ணம் தவறானது என்று அவர் குறிப்பிட்டார்.
டிசம்பர் 2ஆம் தேதி ‘கிஸ்92’ வானொலி நிலையத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் மத்திய சமையல் கூடத்தைப் பற்றிய தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
“நமது பள்ளிகளில் செயல்படும் ஆயிரக்கணக்கான உணவகங்களின் உணவின் தரத்தை சோதிப்பது அல்லது நிர்வகிப்பது மிகவும் சிரமம். ஆனால் ஒரே இடத்தில் உணவு சமைக்கப்படுவதால் உணவின் தரத்தை சோதிப்பது எளிது,” என்றார்.
முப்பது நிமிடம் நீடித்த நேர்காணலில் மத்திய சமையல் கூடங்களில் சமைக்கப்படும் உணவில் சத்து குறைாக இருப்பதாகக் கூறப்படும் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.
பள்ளிகளில் உணவகங்களை நடத்துவது தொடர்ந்து நீடிக்குமா, புதிய மாற்றம் எப்படி நிர்வகிக்கப்படுகிறது போன்ற கேள்விகள் அவரிம் எழுப்பப்பட்டன.
புதிய வழிகளில் உணவகங்களை நடத்துவது குறித்து பள்ளிகளிடம் ஆலோசனை தொடங்கியிருப்பதாக கடந்த நவம்பர் மாதம் திரு சான் அறிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
டிசம்பர் 2ஆம் தேதி வரையில் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை உணவுக்கடைகளை நடத்த 62 விளம்பரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.
மாணவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே உணவுக்கு முன்கூட்டியே பதிவு செய்து கட்டணத்தை செலுத்துவது ஒரு வாய்ப்பாகும். பள்ளிகளுக்கு விநியோகிக்க மத்திய சமையல் கூடத்தில் உணவு தயாரிக்கப்படும். “இது, கட்டுப்படியாகக்கூடிய , ஆரோக்கியமான மற்றும் தரமான உணவை உறுதி செய்வதற்கான சாத்தியமான தீர்வு,” என்று திரு சான் கூறினார்.
அதே சமயத்தில் கல்வி அமைச்சு, பள்ளிகளில் பாரம்பரிய உணவகங்களை நடத்தும் வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது.
எதிர்காலத்தில், உணவகங்களின் கடைக்காரர்களால் உணவு வழங்கப்படும் என்றும் மத்திய சமையல் கூடத்திலிருந்து பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என்ற அமைச்சர் சான், பள்ளிகள் தங்களுடைய தேவைகளின் அடிப்படையில் ஏதாவது ஒரு வாய்ப்பை தேர்ந்தெடுக்கலாம் என்றார்.