சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் சட்டவிரோதமாக உயர்ரக என்விடியா சில்லுகளை ஏற்றுமதி செய்த நான்கு நிறுவனங்கள்மீது புதன்கிழமை (ஜூலை 1) மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எபிரியா இன்டர்நேஷனல், ஏ-ஸ்பீட் இன்போடெக், எபிரியா கிளவுட் சர்வீசஸ், லக்சூரியேட் யுவர் லைப் ஆகியவை அந்த நான்கு நிறுவனங்கள்.
இந்த வழக்கில் தொடர்புடைய மூவர்மீது கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
எபிரியா குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜென்னி லிம்,51, தலைமை விற்பனை அதிகாரி ஆரோன் வூன் குவோ ஜி, 41, லக்சூரியேட் யுவர் லைப் நிறுவனத்தின் லி மிங், 52 ஆகியோர் அந்த மூவர்.
அதேபோல், ஜூலை 6ஆம் தேதி எபிரியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் வெய்யும், 50, மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியது தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுவார் என்று காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் 55 மில்லியன் மதிப்பிலான ஒரு குட் கிளாஸ் பங்களா, வங்கிக் கணக்கில் இருந்த 1 மில்லியன் ரொக்கம் என 56 மில்லியன் வெள்ளி மதிப்பிலான சொத்துகளைக் காவல்துறை முடக்கியுள்ளது.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடையில் சந்தேக நபர்களின் நிறுவனங்கள் உயர்ரக என்விடியா சில்லுகளை ஏற்றுமதி செய்துள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

