என்விடியா சில்லு வழக்கு: சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக நம்பப்படும் $38 மி.

என்விடியா சில்லு வழக்கு: சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதாக நம்பப்படும் $38 மி.

2 mins read
சந்தேக நபர் பணத்தைக் கொண்டு வீடு வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது
4572f447-ab8d-43b0-ac6a-97b02c357845
ஏலன் வெய் சாவ்லுன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நுண் சில்லுத் தயாரிப்பு நிறுவனமான என்விடியா சம்பந்தப்பட்ட ஏமாற்று வழக்கில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் ஆடவர், சட்டவிரோதமாக ஈட்டிய 38 மில்லியன் வெள்ளிக்கும் அதிக தொகையைக் கொண்டு தரை வீட்டை வாங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஏலன் வெய் சாவ்லுன் எனும் அந்த 50 வயது ஆடவர்மீது திங்கட்கிழமை (ஜூலை 6) பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாக மூன்று குற்றச்சாட்டுகளும் ஏமாற்றியதாக ஆறு குற்றச்சாட்டுகளும் அவர்மீது சுமத்தப்பட்டுள்ளன.

11 குற்றச்சாட்டுகள்

ஏ-ஸ்பீட் இன்ஃபோடெக், அப்பீரியா இன்டர்நேஷனல் அப்பீரியா கிளவுட் சர்வீசஸ் (II) ஆகிய நிறுவனங்களைக் கொண்ட குழுமத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான அவர் தற்போது மொத்தம் 11 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 38 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைக் கொண்டு அவர் 2024ஆம் ஆண்டு ஜூலை, அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆடம் ரோட்டுக்கு அருகே உள்ள சீ ஹூன் அவென்யூவில் சம்பந்தப்பட்ட வீட்டை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த உயர்தர சொகுசு பங்ளாவின் மதிப்பு கிட்டத்தட்ட 55 மில்லியன் வெள்ளி என்று காவல்துறை முன்னதாக அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

வங்கிக் கணக்குகளில் $5 மில்லியன்

வெய், அந்த ஆண்டு தனது இரு வங்கிக் கணக்குகளில் ஐந்து மில்லியன் வெள்ளிக்கும் அதிக தொகையைப் பெற்றதாகவும் நம்பப்படுகிறது. அத்தொகையில் கிட்டத்தட்ட 3.2 மில்லியன் வெள்ளி சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வெய், 2023, 2024ஆம் ஆண்டுகளில் ஏரன் வூன் குவோ ஜியே, 41, ஜென்னி லிம், 51, ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டு பலமுறை ஏமாற்றுச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை அப்பீரியா இன்டர்நே‌ஷனல்மீது ஏமாற்றியதாக ஐந்து குற்றச்சாட்டுகளும் அப்பீரியா கிளவுட் சர்வீசஸ் (II) மீது அத்தகைய இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன. ஏ-ஸ்பீட் இன்ஃபோடெக்மீது ஏமாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அந்த மூன்று நிறுவனங்கள் மற்றும் வெய்க்கான நீதிமன்ற விசாரணைக்கு முன் நடக்கும் சந்திப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்குற்றச்சாட்டுநீதிமன்றம்ஏமாற்றுஎன்விடியா