என்விடியா சில்லுகள் கொண்ட கணினி கட்டமைப்புகளை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்த சந்தேகத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
லை மிங் என்ற 51 வயது ஆடவருக்குப் பிணைத் தொகை ஒரு மில்லியன் வெள்ளி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர் சீனக் குடிமகன்.
48 வயது சிங்கப்பூரர் எலன் வெய் பிணைத் தொகையாக 800,000 வெள்ளி கட்ட வேண்டும். அதேபோல் ஏரன் குவோ ஜி என்ற 40 வயது சிங்கப்பூரர் பிணைத் தொகையாக 600,000 வெள்ளி கட்ட வேண்டும்.
திரு லை, மோசடி உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். வூன் மற்றும் வெய்மீது இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டு திரு லை ‘சூப்பர் மைக்ரோ’ என்ற கணினிக் கட்டமைப்பு நிறுவனத்திடம் தமது நிறுவனத்திற்கு கணினிக் கட்டமைப்புகள் வேண்டும் என்று பொய் சொல்லி வாங்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோதமாக வங்கிக் கணக்கு ஒன்றைப் பயன்படுத்தி தமது நிறுவனத்திற்குத் தேவையான நிதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதேபோல் வூனும் வெய்யும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட லைக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஆடவர்களும் டெல், சூப்பர் மைக்ரோ நிறுவனங்களை ஏமாற்றத் துணையாக இருந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு பேரும் தாங்கள் வாங்கிய கணினிக் கட்டமைப்புகளை உரிய அனுமதி உள்ள நபர்களுக்கு மட்டும்தான் வழங்குவோம் என்று பொய்யான தகவல்களை நிறுவனங்களிடம் கொடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும் வூனும் வெய்யும் சிங்கப்பூரில் செயல்படும் ‘ஏப்ரியா’ என்னும் மேகக் கணினித் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்தில் உயர் அதிகாரிகளாக ஒன்றாகப் பணி புரிந்துள்ளனர்.
இந்த இருவரும் சம்பந்தப்பட்ட வழக்கு 250 மில்லியன் வெள்ளி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. லை தொடர்பான வழக்கில் 140 மில்லியன் வெள்ளி சம்பந்தப்பட்டுள்ளது.
வழக்குத் தொடர்பான விசாரணை மே 2ஆம் தேதிக்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

