‘ஓ’ நிலை தேர்வு முடிவுகள் ஜனவரி 14ல் வெளியாகும்

2 mins read
9f6bf611-b521-4f4c-aade-69a233baea0d
கடந்த ஆண்டு ‘ஓ’ நிலை தேர்வு எழுதிய மாணவர்கள் ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் தங்கள் உயர்நிலைப்பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘ஓ’ நிலை எனப்படும் ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வின் முடிவுகள் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ‘ஓ’ நிலை தேர்வு எழுதிய மாணவர்கள் ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் தங்கள் உயர்நிலைப்பள்ளிகளுக்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்தகவலை கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் புதன்கிழமை (ஜனவரி 7) வெளியிட்டன.

தேர்வு முடிவுகளை நேரில் சென்று பெற்றுக்கொள்ள முடியாத மாணவர்கள், தங்கள் சார்பாக ஒருவரை அனுப்பிவைக்கலாம்.

மாணவர்கள் சார்பாகத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வோர் அதற்குத் தேவையான ஆவணங்களைப் பள்ளி நிர்வாகத்தினரிடம் காட்ட வேண்டும்.

தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள தங்கள் சார்பாக ஒருவரை அனுப்ப இயலாத மாணவர்கள் இதுகுறித்து தங்கள் பள்ளிகளுடன் தொடர்புகொண்டு உதவி நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மாணவர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 2.45 மணி முதல் ஜனவரி 28ஆம் தேதி இரவு 11 மணி வரை தங்கள் தேர்வு முடிவுகளைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகத்தின் இணையவாசல் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

சிங்பாஸ் கணக்கு இல்லாத மாணவர்கள், தேர்வுகளுக்காக அவர்கள் உருவாக்கிய இணையவாசல் கணக்கைப் பயன்படுத்தி தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள், தனியார் மாணவர்கள் ஆகியோருக்கு ஜனவரி 14ஆம் தேதி பிற்பகல் 2.45 மணி முதல் மின்னஞ்சல் மூலம் படிவம் ‘ஏ’ மின்னிலக்க வடிவமாக அனுப்பி வைக்கப்படும்.

அந்த மின்னிலக்கப் படிவத்தில் மாணவர்களின் தேர்வு முடிவுகளும் அவர்கள் எந்தெந்த பயிற்சிகள், கல்வித் திட்டம் ஆகியவற்றுக்குத் தகுதி பெறுகின்றனர் என்ற விவரங்களும் இடம்பெறும்.

மாணவர்கள் தங்கள் தெரிவுகளைக் கூட்டு சேர்க்கைப் பயிற்சி இணையத்தளம் மூலம் ஜனவரி 14ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஜனவரி 19ஆம் தேதி மாலை 4.30 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

அதன் முடிவுகள் கைப்பேசி குறுந்தகவல் மற்றும் கூட்டு சேர்க்கைப் பயிற்சி இணையத்தளம் மூலம் பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்லூரி அல்லது மில்லேனியா கல்வி நிலையத்தில் இடம் கிடைக்கும் மாணவர்கள் பிப்ரவரி 4ஆம் தேதியன்று அந்தந்த கல்லூரி அல்லது கல்வி நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் இடம் கிடைக்கும் மாணவர்களுக்கு அதுதொடர்பான மேல் விவரங்கள் பிப்ரவரி 3ஆம் தேதியன்று மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்கப்படும்.

பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் கிடைக்கும் மாணவர்களுக்கு அதுதொடர்பான மேல் விவரங்கள் பிப்ரவரி மாத இறுதிக்குள் அனுப்பிவைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்