தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓட்லி ஆலை மூடல்; வேலை இழக்கும் 59 ஊழியர்கள்

2 mins read
78ca7cc6-1073-4431-9658-a270451d201a
வேலை இழப்பவர்களில் 25 பேர் இயோ ஹியாப் செங் நிறுவனத்தின் ஊழியர்கள். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் உள்ள ஓட்லி ஆலை மூடப்பட இருக்கிறது.

இந்த ஆலை சுவீடனைச் சேர்ந்த ‘ஓட்ஸ்’ பால் தயாரிப்பு நிறுனமான ஓட்லிக்குச் சொந்தமானது.

சிங்கப்பூரில் உள்ள தனது ஆலையை மூடவிருப்பதாக டிசம்பர் 18ஆம் தேதியன்று அந்நிறுவனம் அறிவித்தது.

இதன் காரணமாக மொத்தம் 59 ஊழியர்கள் வேலை இழக்கின்றனர்.

அவர்களில் 34 பேர் ஓட்லி நிறுவனத்தின் ஊழியர்கள்.

எஞ்சிய 25 பேர் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான இயோ ஹியாப் செங்கின் ஊழியர்கள்.

வேலையை இழக்கும் இந்த ஊழியர்கள் ஓட்லி நிறுவனத்தின் உற்பத்திப் பணிகளுடன் நேரடி தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

“பாதிக்கப்பட்ட ஊழியர்களை முடிந்தவரை நிறுவனத்தின் மற்ற பிரிவுகளில் பணியமர்த்த இயோ ஹியாப் செங் முயற்சி செய்துள்ளது. 16 ஊழியர்கள் வேறு பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்,” என்று இயோ ஹியாப் செங் நிறுவனம் டிசம்பர் 19ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

வேலை இழக்கும் 25 இயோ ஹியாப் செங் ஊழியர்களுக்கும் ஆட்குறைப்பு தொகுப்புத் திட்டம் மூலம் குறிப்பிட்ட ஒரு தொகை வழங்கப்படும்.

இது அவர்களது சம்பளம், நிறுவனத்தில் பணிபுரிந்த கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அமையும் என்று தெரிவிக்கப்பட்டது.

தனது சினோக்கோ ஆலையில் ஓட்லி நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகளுக்கு உதவவே இந்த 25 பேரும் பணியமர்த்தப்பட்டதாக இயோ ஹியாப் செங் கூறியது.

தனது செலவினங்களைக் குறைக்க சிங்கப்பூரில் உள்ள ஆலையை மூடுவதாக ஓட்லி நிறுவனம் தெரிவித்தது.

2019ஆம் ஆண்டிலிருந்து ஓட்லியுடன் இணைந்து செயல்பட்டு வந்ததை இயோ சுட்டியது.

“உற்பத்திப் பணிகள் முடிவுக்கு வந்தாலும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஓட்லி நிறுவனத்தின் விநியோகங்களுக்கு ஆதரவு வழங்குவதில் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று இயோ ஹியாப் செங் தெரிவித்தது.

ஆலை மூடப்படுவது குறித்து டிசம்பர் 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டதும் ஆட்குறைப்பு பற்றி உணவு, பானத்துறை மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கான சங்கத்திடம் தெரிவித்துவிட்டதாக அந்நிறுவனம் கூறியது.

ஆட்குறைப்பு தொடர்பாக முத்தரப்பு பங்காளித்துவத்தின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு பாதிப்படைந்த ஊழியர்களுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகையை வழங்க உணவு, பானத்துறை மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கான சங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக இயோ ஹியாப் செங் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்