தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லியோன் பெரேராவும் நிக்கோல் சியாவும் மறுத்ததை கட்சித் தலைவர்கள் அப்படியே ஏற்பதா?: அரசியல் கவனிப்பாளர்கள் கேள்வி

2 mins read
2524694f-165e-46b0-a7b1-6bf413583167
புதன்கிழமை நடந்த பாட்டாளிக் கட்சிக் கூட்டத்தில் அதன் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், தலைவர் சில்வியா லிம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அல்ஜுனிட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவும் மூத்த கட்சி உறுப்பினர் நிக்கோல் சியாவும் தங்களது தகாத உறவு பற்றி தொடக்கத்தில் பொய் சொன்னதைத் தொடர்ந்து இவ்வாரம் கட்சியிலிருந்து விலகியதாகப் பாட்டாளிக் கட்சி புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தது.

இவ்விருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் காணொளி திங்கட்கிழமை இணையத்தில் வெளிவந்தது. இருவருக்குமே திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இந்த ஆதாரம் வெளிவருவதற்குமுன், இருவருக்கும் இடையில் தொடர்புள்ளதா என கட்சித் தலைவர்கள் கேட்டபோது இருவருமே மறுத்துவிட்டனர். கட்சித் தலைவர்கள் தீர விசாரிக்காமல் இருவரது மறுப்பையும் ஏற்றுக்கொண்டது குறித்து அரசியல் கவனிப்பாளர்கள் கேள்வி எழுப்புவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

அதே சமயத்தில், அரசியல்வாதிகள் மனித இயல்புக்கு அப்பாற்பட்டவர்களாக இருப்பார்களென்று எதிர்பார்க்கமுடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாட்டாளிக் கட்சி அதன் நற்பெயரை நிலைநாட்டவும், நம்பிக்கையை வளர்க்கவும், ஆளும் மக்கள் செயல் கட்சியிடமிருந்து இன்னும் அதிகமான இடங்களை வெல்லவும் மேலும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

திரு பெரேராவின் ஓட்டுநர் பாட்டாளிக் கட்சித் தலைவர்களிடம் சொன்னது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்த பாட்டாளிக் கட்சி ‘தீர விசாரித்திருக்க’ வேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணை விரிவுரையாளருமான ஃபெலிக்ஸ் டான் கூறினார்.

“திருவாட்டி சியா, திரு பெரேரா இருவரது மறுப்பையும் (தீர விசாரிக்காமல்) ஏற்றுக்கொண்டது தரமற்ற தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது,” என்றார் அவர்.

கட்சித் தலைமைத்துவம் சரியான கேள்விகளைக் கேட்டதா என்று சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை இணைப் பேராசிரியர் யூஜின் டான் கேட்டார்.

ஆனால், ஆதாரம் இல்லாமல் மேற்கொண்டு விசாரிப்பது சிரமம் என ‘கன்டார் பப்ளிக்’ நிறுவனத்தின் கொள்கை மேம்பாடு, மதிப்பாய்வு, தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் டாக்டர் லியோங் சான்-ஹூங் கருத்துரைத்தார்.

இந்தச் சம்பவத்தால் அடுத்த தேர்தலில் பாட்டாளிக் கட்சி பாதிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறினர்.

குறிப்புச் சொற்கள்