சிங்கப்பூரின் ஓசிபிசி வங்கி, முன்னுரைப்புகளைக் கடந்து, மூன்று விழுக்காடு லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான வருவாய் அறிக்கையை அந்த வங்கி புதன்கிழமை (பிப்ரவரி 25) வெளியிட்டது.
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஓசிபிசி வங்கி $1.75 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அது மூன்று விழுக்காடு அதிகம்.
காலாண்டுக்கான லாபம் $1.72 பில்லியனாக இருக்கும் என்று புளூம்பெர்க் கருத்தாய்வில் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிக லாபத்தை வங்கி பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டின் லாபத்திலிருந்து கிடைக்கும் தொகையிலிருந்து பங்குதாரர்களுக்கு 58 காசு ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. அதில் 16 காசுகள் சிறப்பு ஈவுத்தொகை.
நாலாம் காலாண்டிற்கான வட்டி வருவாய் $2.30 பில்லியனுக்குக் குறைந்தது. இது ஆறு விழுக்காடு சரிவு. வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதத்தைக் காட்டிலும் சொத்துகள் மூலமான வருவாய் குறைந்தது அதற்கு முக்கிய காரணம் என்று வங்கி தனது காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதேவேளை, வட்டி அல்லாத வருவாயும் நிகர வர்த்தக வருவாயும் அதிகரித்ததாக அது குறிப்பிட்டுள்ளது.

