ஓசிபிசி வங்கி, இந்த ஆண்டுக்கான (2024) அதன் இலக்குகளை எட்டுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மூன்றாம் காலாண்டில் சந்தை எதிர்பார்ப்புகளைவிட அதிகமாக அது ஒன்பது விழுக்காடு நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அதன் நிகர லாபம் $1.97 பில்லியனாக அதிரித்துள்ளது. ஒப்புநோக்க, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ஓசிபிசி வங்கியின் நிகர லாபம் $1.81 பில்லியனாக இருந்தது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அது $1.91 பில்லியன் லாபம் ஈட்டும் என முன்னுரைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டுக்கான நிகர லாப இலக்கை எட்டிவிட முடியும் என்று கூறிய வங்கி, குறைவான வட்டி விகிதச் சூழலுக்கு ஏற்றவகையில் வங்கியின் நிதி நிலைமையைக் கொண்டிருப்பது தொடர்பில் தொடர்ந்து பணியாற்றவிருப்பதாக நவம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
புவிசார் அரசியல் நிலவரங்களால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அது குறிப்பிட்டது.
சொத்து நிர்வாக நடவடிக்கைகள் மேம்பட்டதும் ஓசிபிசி வங்கியின் லாபம் அதிகரித்ததற்குக் காரணம் என்று கூறப்பட்டது. காப்பீட்டு வருவாய் அதிகரித்ததும் குறைவான படித்தொகையும் லாப உயர்வுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது.
அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய வட்டி விகித உயர்வால் சிங்கப்பூர் வங்கிகள் நன்மையடைந்தன.
ஓசிபிசி வங்கியைப் போலவே டிபிஎஸ் வங்கியும் யுஓபி வங்கியும் சாதனை அளவிலான காலாண்டு வருவாய் பதிவானதாகக் கூறியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரின் அரசியல் நிலைத்தன்மையால் வெளிநாட்டு முதலீடுகள் வலுவடைந்ததும் சிங்கப்பூர் வங்கிகள் அதிக லாபம் ஈட்டியதற்குக் காரணம்.
இவ்வேளையில், பங்குகளைத் திரும்ப வாங்கும் திட்டம் குறித்துப் பரிசீலிப்பதாக யுஓபி வங்கி வெள்ளிக்கிழமை (நவம்பர் 8) தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அதன் பங்குகளின் விலை வெகுவாக அதிகரித்தது.
முன்னதாக, நவம்பர் 7ஆம் தேதி, டிபிஎஸ் குழுமம் $3 பில்லியன் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்கும் திட்டத்தை அறிவித்தது. அதையடுத்து டிபிஎஸ் குழுமப் பங்குகளின் விலை 6.5 விழுக்காடு உயர்ந்தது.
சிங்கப்பூரின் மூன்று முக்கிய வங்கிகளான டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி ஆகியவற்றின் நிதி நிலைமை வலுவாக இருப்பதால் அவற்றின் பங்குதாரர்களுக்கு நல்ல லாபம் காத்திருப்பதாகக் கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி பங்குகளின் விலை முறையே 1.3 %, 9.5%, 2% கூடியது.