புதிய அச்சுறுத்தல்களிலிருந்து தரவுகளை இன்னும் திறம்பட பாதுகாக்கவும் மோசடிகள் நடைபெறும்போது அப்போதே அவற்றைக் கண்டறியும் திறனை வலுப்படுத்தவும் ஓசிபிசி வங்கி மேம்படுத்தப்பட்ட குவாண்டம் கணினிகளைப் பயன்படுத்த மூன்று உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டது.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுடன் ஒசிபிசி வங்கி ஒப்பந்தம் செய்தது.
வழக்கமான பாரம்பரிய கணினி கட்டமைப்புகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளைக் குவாண்டம் கணினிக் கட்டமைப்புகளால் தீர்க்க முடியும் என்றார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டுப் பிரிவின் தலைமை குவாண்டம் ஆலோசகர் டேவிட் கோ.
சிக்கலான தளவாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது, போதைப் பொருளைத் துரிதமாக அடையாளம் காண்பது, புதிய பொருள்களைக் கண்டுபிடித்தல், அதிகரிக்கும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை செய்ய முடியும் என்றார் திரு கோ.
2022ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் அதிகாரிகள் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் மொத்தம் $700 மில்லியனை ஒதுக்கியுள்ளது.
2024ஆம் ஆண்டு, ஓசிபிசி வங்கி குவாண்டம் கணினி அமைப்பு உட்பட திட்டங்களிலும் பாதுகாப்புத் திட்டங்களிலும் பயிற்சிகளை வழங்கத் தொடங்கியது.
இதுவரை பயிற்சி பெற்ற கிட்டத்தட்ட 50 ஓசிபிசி ஊழியர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
“சாதாரண கணினி ஒரு மில்லியனுக்கும் அதிகமான சூழல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளைத் தரும். குவாண்டம் கணினிகளுக்கு முடிவுகளைத் தர 1,000 சூழல்கள் மட்டும் போதுமானவை,” என்றார் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் குவாண்டம் தொழில்நுட்பங்கள் நிலைய தலைமைப் புலனாய்வாளர் பேராசிரியர் ரெபென்ட்ரொஸ்ட்.
தொடர்புடைய செய்திகள்
ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டவை ஆய்வுக் கட்டரைகளாக வெளியிடப்படும். குவாண்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த விரும்பும் எத்தகைய அமைப்புகளுக்கும் அந்தக் கட்டுரைகள் உதவும்.

