ஓசிபிசி வங்கி, அதன் சொத்து ஆலோசகர்களுக்கு ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு (ஜென் ஏஐ) மூலம் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்திருக்கிறது.
தனது 900 சொத்து ஆலோசகர்களுக்குப் பயிற்சியளிக்க ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவு அம்சத்துடனான பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ளதாக ஓசிபிசி புதன்கிழமை (ஏப்ரல் 15) அறிவித்தது. இதுவரை நேரடிக் கண்காணிப்பை மையமாகக் கொண்ட பயிற்சி முறையையே அது பின்பற்றியது.
ஆறு மாதகாலத்துக்கான இப்பயிற்சித் திட்டத்தை உருவாக்க ஓராண்டுக்கும் மேலானது. முதலீடு சார்ந்த ஆலோசனைகள், வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொள்ளுதல், சொத்தைக் கையாளும் வழிமுறைகள் (wealth planning) போன்ற அம்சங்களில் சொத்து ஆலோசகர்களுக்குப் பயிற்சியளிப்பது நோக்கம்.
“பொதுவாக சொத்து ஆலோசகர்கள் தங்களின் மேற்பார்வையாளர்கள் வழங்கும் ஒரு பயிற்சியில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய மூன்று வாரங்கள் வரை ஆகலாம். மேற்பார்வையாளர் ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 10 பேருக்குப் பயிற்சி அளிப்பார். மற்ற பொறுப்புகளைப் பார்த்தபடி அவர்கள் பயிற்சியளிப்பர்; அதனால், வெவ்வேறு மேற்பார்வையாளர்கள், பயிற்சி பெறுவோரை மதிப்பிடும் தரநிலைகளும் தேர்ச்சி குறித்து அவர்களுக்கு வழங்கும் அறிவுரையும் மாறுபடலாம்,” என்று ஓசிபிசி தெரிவித்தது.
பயிற்சித் திட்டத்தின் செயல்பாடு
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேர்த்துக்கொள்ளாமல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளக்கூடும் என்பதை மையமாகக் கொண்டு புதிய பயிற்சித் திட்டம், சொத்து ஆலோசகர்களுக்குப் பயிற்சியளிக்கிறது. வாடிக்கையாளர்கள் எப்படி நடந்துகொள்ளக்கூடும் என்பதைக் கற்பனை செய்து யதார்த்தத்துக்கு நிகரான சூழல்கள் உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்படும்.
வாடிக்கையாளரின் நீண்டகாலத் தேவைகளை அடையாளம் காண அவருக்கென முதலீட்டுப் ‘பதிவை’ (portfolio) உருவாக்குவது, வாடிக்கையாளர் எதிர்கொள்ளக்கூடிய அபாயங்களை அடையாளம் காண்பது, அவருக்கு எத்தகைய நிதித் திட்டங்களை வழங்குவது போன்ற முடிவுகளை எடுப்பது ஆகிய அம்சங்கள் பயிற்சியில் அடங்கும் என்றும் ஓசிபிசி குறிப்பிட்டது.
பயிற்சி தரும் நன்மைகள்
முதல் மூன்று மாதங்களில் புதிய பயிற்சியை மேற்கொண்ட சொத்து ஆலோசகர்களுக்கு வாரந்தோறும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்புகள் இருமடங்கானதாக ஓசிபிசி தெரிவித்தது. புதிய பயிற்சியை மேற்கொள்ளாதோருடன் ஒப்பிடுகையில் இந்தப் புள்ளிவிவரம் பதிவானது.
விரிவாக்கம்
மலேசியாவிலும் ஹாங்காங்கிலும் இருக்கும் தங்களின் கிளைகளிலும் புதிய பயிற்சித் திட்டத்தைப் பயன்படுத்த எண்ணம் கொண்டுள்ளதாக ஓசிபிசி தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பயிற்சித் திட்டம், வெளிநாடுகளில் அந்தந்த சூழல்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

