தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஓசிபிசியின் இரண்டாம் காலாண்டு லாபம் 7% குறைந்தது

1 mins read
f750ee4d-bdfe-42f9-a8df-9379bd933e9a
ஓசிபிசியின் இரண்டாம் காலாண்டு லாபம் குறைந்தது. ஆனாலும் புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் முன்னுரைக்கப்பட்ட $1.79 பில்லியனைவிட அது அதிகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஓசிபிசி வங்கி இரண்டாம் காலாண்டில் ஈட்டிய லாபம் ஆண்டு அடிப்படையில் 7 விழுக்காடு குறைந்துள்ளது. வட்டி விகிதம் குறைந்ததால் அதன் மூலம் கிடைக்கும் நிகர வருவாயும் இறங்கியது.

இரண்டாம் காலாண்டில் வங்கிக்குக் கிடைத்த நிகர லாபம் $1.82 பில்லியன். போன ஆண்டில் (2024) அது $1.94 பில்லியனாக இருந்தது. ஆயினும் அது புளூம்பெர்க் கருத்துக்கணிப்பில் முன்னுரைக்கப்பட்ட $1.79 பில்லியனைவிட அதிகம்.

இடைக்கால ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 41 காசை வங்கி அறிவித்தது. ஓராண்டுக்கு முன்னர் அது 44 காசாக இருந்தது. வங்கி கொடுக்கும் ஒட்டுமொத்த இடைக்கால ஈவுத்தொகையின் மதிப்பு $1.84 பில்லியன்.

வட்டாரம் முழுதும் ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கப்பட்டதைவிடக் கூடுதல் வளர்ச்சி காணப்பட்டதாக ஓசிபிசி வங்கி தெரிவித்தது.

அமெரிக்கா பல நாடுகளுக்கு ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து புதிய வரிகளை அறிவித்துள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றமும் பணவீக்கத்தால் ஏற்படக்கூடிய உத்தேசத் தாக்கமும் ஆண்டின் பிற்பாதியில் வர்த்தகச் சூழலைப் பாதிக்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அனைத்துலக, வட்டார வளர்ச்சி ஆண்டின் கடைசி ஆறு மாதங்களில் மெதுவடையும் என்று ஓசிபிசி வங்கி முன்னுரைத்துள்ளது. இருப்பினும் தனது வலுவான நிதி, மூலதன நிலையால் அதனைச் சமாளிக்க முடியும் என்று வங்கி நம்பிக்கையுடன் இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்